தண்டவாளம் அருகே நின்று டிக்டாக் ரயில் மோதி வாலிபர் பலி
தண்டவாளம் அருகே நின்றுகொண்டு டிக் டாக் செய்து கொண்டிருந்த வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி அருகே நடந்துள்ளது. சமீப காலம் வரை இந்தியாவில் டிக் டாக் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.... சீனாவுடன் ஏற்பட்ட போர் அபாயம் காரணமாக டிக் டாக் உள்பட 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்த டிக் டாக் கொடுமை மூலம் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் ஏராளம். இதற்கு தடை விதிக்கப்பட்டிருக்காவிட்டால் இன்னும் பல உயிர்கள் பறிபோயிருக்கும். டிக்டாக்கில் தங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பலர் பல்வேறு சாகசங்களில் ஈடுபடுவது உண்டு.
ரயில் வரும்போது தண்டவாளத்தின் முன் நின்று கொண்டும், ரயில் மீது ஏறி நின்றும், யானைகள், புலிகள் உள்பட வனவிலங்குகளுக்கு அருகே நின்றும், இப்படி பல சாகசங்களுடன் டிக் டாக் செய்து உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் ஒரு வாலிபர் ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று டிக்டாக் வீடியோ செய்தபோது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி பகுதியை சேர்ந்த ஹம்சா நவீத் (18) என்ற வாலிபர் தன்னுடைய நண்பர் ராஜா ரபாகத் என்பவருடன் சேர்ந்து அங்குள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே டிக்டாக் வீடியோ செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்தது.
டிக்டாக் வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் ரயில் வருவதை ஹம்ஸா நவீத் கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில் நவீத் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு முன்பும் இதுபோன்ற பல சாகசங்களை நவீத் நடத்தியுள்ளார் என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர். கடந்த இரு வருடங்களுக்கு முன்பும் பாகிஸ்தானில் டிக்டாக் மூலம் ஒரு வாலிபர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அமர் ஹைதர் என்ற வாலிபர் டிக் டாக் வீடியோவுக்காக துப்பாக்கியால் சுடுவது போன்று நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்த குண்டு அந்த வாலிபரின் தலையில் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.