நடிகை பலாத்கார வழக்கு முன்னாள் முதல்வர், பாஜக, காங். தலைவர்களுக்கு எதிராக சிபிஐ விசாரிக்க உத்தரவு
கேரள அரசியலில் கடந்த 7 வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவரும், நடிகையுமான சரிதா நாயரை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, 4 காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஒரு பாஜக தேசியத் துணைத் தலைவர் ஆகியோருக்கு எதிராக சிபிஐ விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த 2011 முதல் 2016 வரை உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. சுமார் 4 வருடங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் சரிதா நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது கைது உம்மன் சாண்டி அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியது.
தன்னுடைய மோசடியில் அப்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களாக இருந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் உதவி செய்ததாக அவர் பரபரப்பு குற்றம் சாட்டினார். மேலும் முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த சிலரும் தனக்கு உதவி செய்ததாக அவர் கூறினார். இதற்கிடையே சோலார் பேனல் மோசடி தொடர்பாக போலீசார் சரிதா நாயரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் தமிழ்நாட்டிலும் கோவை, சேலம், நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் இதே மோசடி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 3 வருடங்களுக்கு முன் சரிதா நாயர் திடீரென தன்னை முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, அப்போதைய காங்.அமைச்சர் அனில்குமார், முன்னாள் காங். எம்பி வேணுகோபால், தற்போதைய காங். எம்.பி.க்களான அடூர் பிரகாஷ், ஹைபி ஈடன் மற்றும் தற்போதைய பாஜக தேசியத் துணைத் தலைவரான அப்துல்லா குட்டி ஆகியோர் பலாத்காரம் செய்ததாக கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் உம்மன் சாண்டி உள்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை துரிதகதியில் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென உம்மன் சாண்டி உள்பட 6 பேருக்கு எதிராகவும் சிபிஐ விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக விரைவில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவும் கேரள அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் உம்மன் சாண்டி உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பலாத்கார புகாரில் சிபிஐ விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே தன்னுடைய புகாரில் உறுதியாக இருப்பதாக சரிதா நாயர் தெரிவித்துள்ளார். இவர் ஒரு சில மலையாளப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.