கேரளாவில் கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா தேசிய சராசரியை விட 6 மடங்கு அதிகம்

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மிக அதிகமாகி வருகிறது. தினசரி நோயாளிகள் எண்ணிக்கையிலும், மொத்த நோயாளிகள் எண்ணிக்கையிலும் மற்ற மாநிலங்களை விட கேரளா முன்னிலையில் உள்ளது. தற்போது தேசிய சராசரியை விட இங்கு 6 மடங்கு அதிகம் நோய் பரவுகிறது. இந்தியாவிலேயே கொரோனா நோய் கேரளாவில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதன் பின்னர் இந்த மாநிலத்தில் நோய் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பெரும்பாலான மாநிலங்களில் நோய் பரவல் அதிக அளவில் இருந்த போது கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கடந்த சில மாதங்களாக தேசிய அளவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் நேர்மாறாக கடந்த சில மாதங்களாக நோயாளிகள் எண்ணிக்கை பெருமளவு கூடி வருகிறது. தினமும் சராசரியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவுகிறது. தற்போது தேசிய அளவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 15 ஆயிரத்திற்கும் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையைப் போலவே தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கையும் இந்தியாவிலேயே கேரளாவில் தான் மிக அதிகமாகும். நேற்று கேரளாவில் 6,036 பேருக்கு நோய் பரவியது. 48,378 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 ஆயிரத்து மேற்பட்டோருக்கு நோய் பரவியது தெரியவந்துள்ளது. இதன்படி டெஸ்ட் பாசிட்டிவிட்டி சதவீதம் 12.48 ஆகும்.

அதாவது நேற்று 100 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 12க்கும் மேற்பட்டோருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியை விட 6 மடங்கு அதிகமாகும். தற்போது தேசிய அளவில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி சதவீதம் 2 மட்டுமே ஆகும். கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி சதவீதம் 10க்கும் மேல் உள்ளது. இது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்பட மற்ற தென் மாநிலங்களை விட 10 மடங்கு அதிகமாகும். நேற்று வரை உள்ள கணக்கின் படி கேரளாவில் கொரோனா பாதித்து 72,791 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவும் தேசிய எண்ணிக்கையை விட அதிகமாகும். இதுவரை கேரளாவில் நோய் பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 3,607 பேர் ஆகும். கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மத்திய சுகாதாரத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நோய் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

More News >>