கேரளாவுக்கு கள்ளநோட்டு கடத்தல் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

கேரளாவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கடத்திச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 6 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. தேனி, கம்பம் வழியாக தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு பெருமளவு கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதாக இடுக்கி மாவட்ட எஸ் பி கருப்பசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக-கேரள எல்லையான குமுளி பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில தினங்களாக தமிழக-கேரள எல்லையில் போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விசாரணையில் கேரளாவுக்கு கள்ளநோட்டுகளை கடத்தும் தமிழ்நாட்டு கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கும்பலுக்கு போலீசார் வலை விரித்தனர். அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் அணுகினார். தனக்கு கள்ளநோட்டு வேண்டுமென்றும் உடனடியாக கொண்டு வந்தால் உரிய பணம் தருவதாகவும் அவர் கூறினார். இதை அந்த கும்பலைச் சேர்ந்தவர் நம்பியுள்ளார். இதன்படி கார் மற்றும் பைக்குகளில் 6 பேர் கள்ளநோட்டுகளுடன் குமுளி பகுதிக்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு மாறுவேடத்தில் பதுங்கி இருந்தனர். அவர்கள் வந்த கார் மற்றும் பைக்கை மறித்து போலீசார் நடத்திய சோதனையில் காரின் ரகசிய அறையில் வைத்திருந்த 3 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக அந்த கும்பலை சேர்ந்த செபஸ்டியன் (42), கோவையை சேர்ந்த முத்துவேந்திரன் (43), சுருளிராஜன் (32), சின்னமனூர் பகுதியை சேர்ந்த மகாராஜன் (32), கம்பத்தைச் சேர்ந்த மணியப்பன் (30), வீரபாண்டியை சேர்ந்த பாண்டி (53), மற்றும் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பையன் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கும்பல் கடந்த பல மாதங்களாக கள்ளநோட்டுகளை கேரளாவுக்கு கடத்தி சென்று புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின் போலீசார் 6 பேரையும் கட்டப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More News >>