பறவைக்கு தீனி கொடுத்து சிக்கலில் மாட்டிய கிரிக்கெட் வீரர் வழக்கு பதிவு செய்ய ஆலோசனை
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வாரணாசியில் சுற்றுலாப் பயணத்தின் போது ஒரு பறவைக்கு கையில் வைத்து தீனி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த படகின் உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்தியாவில் கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கோழிகள், வாத்துகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் கொல்லப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் கோழி உள்பட பறவை இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து பறவைகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரணாசிக்கு சுற்றுலா சென்ற பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், அங்குள்ள ஏரியில் படகில் சென்ற போது போது பறவைக்கு கையில் வைத்து தீனி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடரில் விளையாடி முடித்த பின்னர் கடந்த மாதம் ஷிகர் தவான் இந்தியா திரும்பினார். இந்நிலையில் இவர் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள ஏரியில் படகில் பயணம் செய்த அவர், பறவைக்கு கையில் வைத்து தீனி கொடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
பறவைகளுக்கு உணவு கொடுப்பதில் மகிழ்ச்சி என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் போட்டோ வெளியானவுடன் ஏராளமானோர் ஷிகர் தவானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பறவைக் காய்ச்சல் பீதி உள்ள இந்த சமயத்தில் பறவைகளுக்குத் தீனி கொடுப்பது ஆபத்தானது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் கவுசல் ராஜ் சர்மா தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. பறவைக் காய்ச்சல் பீதி இருப்பதால் பறவைகளுக்கு உணவு கொடுக்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது என்று ஏற்கனவே அங்குள்ள சுற்றுலா படகு உரிமையாளர்களுக்கு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. இதை மீறி நடந்து கொண்டதால் ஷிகர் தவான் பயணம் செய்த படகு உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.