எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் இந்தியா பதிலடி 20 சீன வீரர்கள் காயம்

எல்லையில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சித்தனர். இதற்கு உடனடியாக இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 சீன வீரர்கள் காயமடைந்தனர். இதில் 4 இந்திய வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் லடாக் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் 20க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பிலும் சில வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய சீன எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட போர் அபாயத்தை தணிப்பதற்காக இதுவரை 7 முறை இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் சிக்கிமை ஒட்டியுள்ள நாகுலா என்ற இடத்தில் மீண்டும் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதையடுத்து இந்திய ராணுவம் அவர்களை எதிர்கொண்டது. இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சீனாவை சேர்ந்த 20 வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்திய தரப்பில் 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் 3 நாட்களுக்கு முன் நடந்தது. தற்போது தான் இந்த மோதல் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

More News >>