நேதாஜி படத்துக்கு பதில் நடிகர் படத்தை திறந்தாரா? ஜனாதிபதி மாளிகை சர்ச்சை..

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த நேதாஜி உருவப்படம் அவரது படமே இல்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது விழா, ஜன.23ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, அவரது உருவப்படத்தை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது இது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி படத்திற்குப் பதிலாக நேதாஜி வேடமிட்டு நடித்த புரோஜித்சென் படத்தை ஜனாதிபதி திறந்து வைத்திருக்கிறார் என்று திரிணாமுல் கட்சியினர் கிண்டலடித்துள்ளனர். திரிணாமுல் எம்.பி. மகுவா மோயித்ரா ஒரு ட்விட் போட்டார். அதில், ராமர் கோயில் கட்டுவதற்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை கொடுத்து மதச்சார்பின்மையை மீறினார்.

இப்போது நேதாஜி வேடத்தில் நடித்த நடிகரின் படத்தை திறந்து வைத்துள்ளார். கடவுள்தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். அதன்பிறகு அதை நீக்கினார்.இதற்கு பதிலடியாக, பாஜகவின் ஐ.டி. பிரிவு அமித் மாளவியா போட்ட ட்விட்டில், திரிணாமுல் கட்சியினர் தவறாக கிண்டலடிக்கின்றனர். அது நேதாஜியின் படம்தான். திரிணாமுல் கட்சியினர் என்ன செய்தாலும் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ஜன.23ம் தேதி நடந்த நேதாஜியின் 125வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அம்மாநில முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.

விழாவில் மம்தா பேசும் போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த மம்தா, அரசு விழாவில் ஒருவரை அழைத்து இப்படி அவமதிப்பு செய்யக் கூடாது. விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு(மத்திய அரசு) அது தெரிய வேண்டும். எனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக நான் இங்கு எதுவும் பேசப் போவதில்லை. ஜெய்ஹிந்த் என்று கூறிவிட்டு சென்றார். இதில், மம்தாவுக்கு எதற்கெடுத்தாலும் ஆத்திரம் வருகிறது என்று பாஜகவினரும், பாஜகவினருக்கு குறைந்தபட்ச மரியாதை கூட தெரியவில்லை என்று திரிணாமுல் கட்சியினரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், நேதாஜி பட சர்ச்சையும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

More News >>