சசிகலா வருவது எப்போது? டி.டி.வி.தினகரன் தகவல்..
சசிகலா ஏற்கனவே திட்டமிட்டபடி பெங்களூரு சிறையில் இருந்து ஜன.27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். தண்டனைக்காலம் முடிந்து அவர் வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளார்.
இதற்கிடையே, அவருக்கு கடந்த 20ம் தேதி மாலையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இதனால், அவர் சிறையில் இருந்து ஏற்கனவே அறிவித்தபடி 27ம் தேதி விடுதலை செய்யப்படுவாரா? அல்லது சிகிச்சை முடிந்து சிறைக்கு திரும்பிய பிறகுதான் விடுதலை செய்யப்படுவாரா என்ற குழப்பம் இருந்தது.
இந்நிலையில், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.