பறவை காய்ச்சல்: ஆஃப் ஆயிலுக்கு நோ சொன்ன ஆணையம்!
பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் பலரும் விரும்பி உண்ணும் ஆப் ஆயில் முட்டையை சாப்பிடக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. ஏற்கனவே இருக்கும் கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் பறவை காய்ச்சல் இன்னொரு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதைக் குறித்து பல மாநில அரசுகள் ஆலோசனைகளை வெளியிட்டு வந்தன. தற்போது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) 10 பாதுகாப்பு ஆலோசனை குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
பறவை காய்ச்சலைக் குறித்து பல நம்பிக்கைகள் உலவி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு முறைப்படி சுத்தப்படுத்தப்பட்டு குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைக்கப்பட்ட முட்டை மற்றும் கோழியிறைச்சியை சாப்பிடலாம் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை தீர்க்கும்வண்ணம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் 10 வழிகாட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
1. அரை அவியல் (half-boiled) முட்டைகளை சாப்பிடவேண்டாம்.2. கோழியிறைச்சியை முழுமையாக சமைக்காமல் உண்ண வேண்டாம்.3. தொற்று பரவியுள்ள இடங்களிலுள்ள பறவைகளை நேரடியாக தொட வேண்டாம்.4. பறவை காய்ச்சலால் மடிந்த பறவைகளை வெறுங்கைகளால் தொட வேண்டாம்.5. சமைக்கப்படாத கோழி இறைச்சியை திறந்து வைக்கக்கூடாது.6. சமைக்கப்படாத கோழி இறைச்சியை வெறுங்கைகளால் தொடக்கூடாது.7. கோழி இறைச்சியை கையாளும்போது முகக்கவசம் மற்றும் கையுறைகளை தவறாமல் அணிந்துகொள்ளவேண்டும்.
8. அடிக்கடி கைகளை கழுவவேண்டும்.9. சுற்றுப்புறங்களை சுகாதாரமாக பராமரிக்கவேண்டும்.10. கோழி இறைச்சி, முட்டைகள் உள்ளிட்ட கோழி தொடர்பான எந்த உணவையும் நன்கு சமைத்த பிறகு சாப்பிடவும்.