கூரியர் பார்சலில் போதைப் பொருள் கடத்தல்... சென்னையில் பதுங்கி இருந்த வாலிபர் கைது
சென்னையில் இருந்து கூரியர் பார்சல் மூலம் கேரளாவுக்குப் போதைப் பொருள் கடத்தியது தொடர்பான புகாரில் தேடப்பட்டு வந்த வாலிபர் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துச் செய்யப்பட்டார். கேரள மாநிலம் கொல்லத்தில் ஒரு கும்பல் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கொல்லம் மாவட்ட கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கலால் துறையினர் நடத்திய விசாரணையில் தீபு (25) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரவுன் சுகர் உள்படப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இவர் அளித்த தகவலின் பேரில் அல்தாப் (26) என்ற வாலிபரும் பிடிபட்டார். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் இருந்து பாபு (32) என்பவர் கூரியர் மூலம் போதைப் பொருளை அனுப்பி வைப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக பாபுவை கைது செய்யக் கலால் துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் அவர் சென்னையில் எங்கு இருக்கிறார் என கண்டுபிடிக்க முடியாததால் அவரை கைது செய்ய முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பாபுவை கைது செய்வதற்காகச் சுங்க இலாகாவினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதுதொடர்பாக சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்புத் துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் பாபு சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள கலால் துறை அதிகாரிகள் சென்னை விரைந்து சென்று பாபுவை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் இவரது வங்கிக் கணக்கில் பல கோடி முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதைப் பொருளை விற்பனை செய்திருக்கலாம் எனக் கலால் துறையினர் கருதுகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.