பாஜக தலைவரின் மகளுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு போலீஸ் வழக்கு

கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனின் மகளுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு கருத்தை பதிவிட்ட வாலிபருக்கு எதிராக கோழிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கேரள மாநில பாஜக தலைவராக இருப்பவர் சுரேந்திரன். சபரிமலையில் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதித்த விவகாரம் தொடர்பாக இவரது தலைமையில் தான் கேரளா முழுவதும் கடுமையான போராட்டம் நடந்தது. இது தொடர்பாக போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடத்தியதின் பேரில் இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இவர் தன்னுடைய மகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். 'என்னுடைய மகள் என்னுடைய பெருமை' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த போட்டோவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்தனர். ஏராளமானோர் அந்த போட்டோ குறித்த தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இதில் கோழிக்கோட்டை சேர்ந்த அஜ்னாஸ் என்பவர் சுரேந்திரனின் மகள் குறித்து மிக மோசமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோழிக்கோட்டில் உள்ள அஜ்னாசின் வீட்டை நோக்கி பாஜக சார்பில் கண்டனப் பேரணியும் நடத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக கோழிக்கோடு போலீசில் பாஜக சார்பில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அஜ்னாசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது அஜ்னாஸ் துபாயில் உள்ளார்.

More News >>