நெல்லை டூ கோவை - சிறப்பு ரெயில் நேர மாற்றம் பயணிகளுக்கு கொண்டாட்டம்

திருநெல்வேலியில் இருந்து கோவைக்கு செல்லும் கோடைகால சிறப்பு ரெயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மாலை 6:20-க்கு கிளம்பும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மூன்று மணி நேரம் தாமதமாக, இரவு 9:40 மணிக்கு இயக்கப்படுகிறது.

எப்போதும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில், கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் தினசரி ரெயிலில், திருநெல்வேலி- நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் பலர் வாரா வாரம் சொந்த ஊர்களுக்குச் சென்று, ஞாயிற்றுக்கிழமை இரவில் கோவைக்கு திரும்புவதை வழக்கமாக கொட்டுள்ளனர். இதனால் நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் தினசரி ரெயிலில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூட்டம் அலைமோதும். திருநெல்வேலியில் ஏறுபவர்களுக்கு இருக்கைகள் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சும், நின்றுகொண்டும், நடைபாதையில் அமர்ந்து கொண்டும் பயணிக்க வேண்டிய நிலைதான் எல்லா ஞாயிறிலும் நடக்கும்.

மேலும், இது விடுமுறை காலம் என்பதால் வழக்கமாக செல்பவர்கள், புதிதாக செல்பவர்கள் என ஒரே நேரத்தில், ஒரே ரெயிலில் குவியும் நிலை ஏற்படுகிறது. இதனால் பயணிகள் நலன் கருதி, தென்னக ரெயில்வே இந்த நேரமாற்றத்தை செய்துள்ளது. இதன்மூலம் புதிதாக விடப்பட்டுள்ள கோடை கால சிறப்பு ரெயிலானது (06019) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9:40-மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து புறப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு கோவை சென்றடையும். இந்த வண்டியானது திண்டுக்கல்லுக்கு பிறகு, ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக கோவை செல்லும் என்பதை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம், தற்போது இதன் புறப்படும் நேரம் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாலையே இயக்கப்பட்டால் பயணிகள் எண்ணிக்கை குறையும் என்பதாலும், நடுவில் இறங்க வேண்டியவர்கள் நடு இரவில் இறங்க வேண்டியுள்ளதாலும் இந்த நேர மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால் கோவை டூ திருநெல்வேலி வண்டியின் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் தினசரி ரெயிலானது (22667) வழக்கம்போல் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இரவு 10:40 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை சென்றடைகிறது.

இதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, (9:40) ஞாயிற்றுக்கிழமை மட்டும் செல்லக்கூடிய சிறப்பு ரெயில் இயக்கப்படுவதால், கோவை செல்லும் பயணிகள் சிரமம் இல்லாமல் வசதியாக நிம்மதியாக.. இந்த விடுமுறை கால பயணத்தை குறைந்த விலையில் அனுபவித்து பயணம் செய்து மகிழ... இந்த இரண்டு ரெயில்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>