கன்னட நடிகை தூக்கிட்டு தற்கொலை.. மன அழுத்தத்தால் விபரீதம்..
கன்னட நடிகையும், கன்னட முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான நடிகை ஜெயஸ்ரீ ராமையா நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிகை ஜெயஸ்ரீ மாடல் அழகியாக இருந்து பிறகு சினிமா நடிகை ஆனார். கடந்த 2017ம் ஆண்டு உப்பு ஹுலிகரா என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். பெங்களுர் பிரகதி வளாகத்தில் அவர் வசித்து வந்தார்.ஜெயஸ்ரீ தற்கொலை பற்றி போலீஸுக்கு தகவல் கிடைத்தவுடன் அவர்கள் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். நடிகையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
நடிகை ஜெயஸ்ரீ கன்னட பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர். இவரது பெயர் அடிக்கடி இணைய தளத்தில் பரபரப்பாகிக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவர் பேஸ்புக்கில், சினிமாவை விட்டு நான் விலகுகிறேன். குட் பை. மன அழுத்தத்தில் வாழ்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். பிறகு அவரே அந்த பதிவை நீக்கினார். இந்நிலையில் அவரை தொடர்பு கொண்டு சில நடிகர், நடிகை கள் தைரியமும் ஆறுதலும் கூறினார்கள்.அதன்பிறகு வெளியிட்ட பதில், நான் நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். எல்லோரையும் நேசிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
மீண்டும் ஜூலை மாதம் மற்றொரு நாளில் ஜெயஸ்ரீ தனது சமூக ஊடகத்தில் 'லைவ்' சென்று, "நான் இதையெல்லாம் விளம்பரத்திற்காகச் செய்யவில்லை. நடிகர் சுதீப் சாரிடமிருந்து நான் நிதி உதவியை எதிர்பார்க்கவில்லை. நான் என் மரணத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன் நான் மனச்சோர்வை எதிர்த்து போராட முடியவில்லை. நான் நிதி ரீதியாக வலுவானவள், ஆனால் மனச்சோர்வடைந்திருக்கிறேன். நான் நிறையத் தனிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். குழந்தை பருவத்திலிருந்தே நான் காட்டிக் கொடுக்கப்பட்டேன், அதை வெல்ல முடியவில்லை என்றார்.மேலும் தன்னைப்பற்றி சிலர் மோசமாகக் கருத்து தெரிவிப்ப தை நிறுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில், "நான் ஒரு உதவதவளாகிவிட்டேன் எனக்கு கருணைக் கொலை தேவை." என குறிப்பிட்டிருந்தார். தற்போது அவர் தற்கொலை செய்துக் கொண்டி ருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சமூக வலைத் தளத்தில் ஜெயஸ்ரீ பதிவு எதுவும் செய்யவில்லை. இது அவர் மன அழுத்தத்தில் இருந்தார் என்பது உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதெல்லாம் யூகமாகக் கணிக்கப்படுவது தான். போலீஸ் விசாரணையில்தான் உண்மை என்ன என்பது தெரியவரும். ஜெயஸ்ரீ தற்கொலை பற்றி அறிந்து கன்னட திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.கன்னட திரையுலகில் கடந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பில் மரணம் அடைந்தார். அது கன்னட திரையுலகினரைச் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. அதிலிருந்து மெல்ல மீண்டும் வரும் நிலையில் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் தமிழ் டிவி நடிகையும், திரைப்பட நடிகையுமான சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு தமிழ் திரையுலகில் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.