டெல்லியில் பதற்றம் விவசாயிகள்,போலீஸ் நேருக்கு நேர் மோதல் தடியடி

டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்திய விவசாயிகளுக்கும், போலீசுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் டெல்லி போர்க்களமானது. மத்திய படையும் குவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள் அங்கு கொடி ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குடியரசு தினமான இன்று டெல்லி நோக்கி டிராக்டர் அணிவகுப்பு நடத்துவோம் என்று போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினர் கூறினர். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னர் 12 மணியளவில் தான் டிராக்டர் அணிவகுப்பு தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே 8 மணியளவில் டெல்லி நோக்கி விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட பாதை வழியாகத் தான் அணிவகுப்பு நடத்த வேண்டும் என்று டெல்லி போலீசார் கூறியிருந்தனர். ஆனால் அந்தப் பாதையை விட்டு வேறு பாதை வழியாக டெல்லி நோக்கி விவசாயிகள் செல்ல முயன்றனர். இதனால் பல இடங்களில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அதை மீறி போலீசாரின் தடுப்பு வேலிகளை தாண்டி விவசாயிகள் டிராக்டர்களுடன் சென்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். ஆனால் அதன் பிறகும் விவசாயிகள் தொடர்ந்து முன்னேறினர். இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். திருப்பி விவசாயிகள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் டெல்லியில் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.டெல்லி தில்ஷாத் பூங்கா, சீமாபுரி, ஐடிஓ உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசுக்கும் விவசாயிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது விவசாயிகள் டிராக்டர்களை ஏற்ற முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் தற்போது அந்த பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். டெல்லி போலீசின் கட்டுப்பாட்டை மீறியதை தொடர்ந்து மத்திய போலீஸ் படை அங்கு வரவழைக்கப்பட்டது. பல இடங்களில் மத்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் தற்போது பெரும் பதற்றம் நிலவுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விவசாயிகள் அதி பாதுகாப்பு மிகுந்த செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>