ஐபிஎல் ஏலத்தில் பிரித்தி ஜிந்தா கை ஓங்கும்.. ஏன்?!
சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பிரித்தி ஜிந்தாவின் சத்தம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஐபிஎல் டி20 போட்டிகள் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. சீசனில் உள்ள 8 அணிகளும் தங்கள் அணிகளின் வீரர்களை தக்க வைத்ததுடன் சில வீரர்களை விடுவித்துள்ளனர்.
அதிகபட்சமாக கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 வீரர்களைத் தங்கள் அணியில் இருந்து விடுவித்துள்ளது. ஐதராபாத் அணி மிகக்குறைவாக 5 வீரர்களை மட்டுமே வெளியேற்றி பெரும்பான்மையான வீரர்களைத் தக்கவைத்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை விடுவித்துள்ளது.
இந்த சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18 அல்லது 19-ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலில் ஐபிஎல் ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்போதைய சூழலில், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபின்ச், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட 55 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். இந்நிலையில், ஏலத்தில் வீரர்களை எடுக்க பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிதான் அதிக பணம் வைத்துள்ளது. ரூ.53.2 கோடி வைத்துள்ள பிரித்தி ஜிந்தா சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தின்போது கைகள் அடிக்கடி உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.