பேரணியை புறக்கணித்த உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் அரசின் கூட்டணியில் விரிசலா?
மும்பையில் நடந்த விவசாயிகள் பேரணியை புறக்கணித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கூட்டத்துக்கு மூன்றாம் கட்ட தலைவரை அனுப்பிவைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று விவசாயிகள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இந்தப் பேரணிக்குப் பிறகு பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பேரணியில் சரத் பவார், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோரட் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அறிவித்தப்படி, மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே பங்கேற்வில்லை. அவருக்கு பதில், சிவசேனா இளைஞரணி நிர்வாகி ராகுல் லோண்டே பங்கேற்றார்.
உத்தவ் தாக்கரே அரசு விழாவில் பங்கேற்றிருந்தார். தனது வீட்டில் இருந்தப்படி கல்யாண் என்ற இடத்தில் கட்டப்பட்டிருக்கும் ரயில்வே மேம்பாலத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். விழா நடைபெற்ற கல்யாணில் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரே பங்கேற்றார். மும்பையில் விவசாயிகள் நடத்திய பேரணியில் சிவசேனா கட்சியில் இருந்து பெரிய தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. பழைய நண்பர் பாஜகவிற்கு இன்னும் ஆதரவாக சிவசேனா இருப்பதாக பலர் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
மும்பை விவசாயிகளுடனான பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சரத் பவார், நடிகை கங்கனா ரணாவத்தைச் சந்திக்க ஆளுநருக்கு நேரம் இருக்கிறது. ஆனால், விவசாயிகளைச் சந்திக்க மட்டும் நேரம் இல்லை என்று சாடினார். `விவசாயிகள் பேரணியின் இறுதியில் ஆளுநரைச் சந்தித்து மனுக்கொடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஆளுநர் கோவாவுக்குச் சென்றுவிட்டதாக என்னிடம் சொல்கிறார்கள். மகாராஷ்டிரா வரலாற்றில் இது போன்ற ஓர் ஆளுநரை நான் பார்த்ததே இல்லை. அவருக்கு நடிகையைச் சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால், விவசாய சகோதரர்களைச் சந்திக்க நேரம் இல்லை. நாட்டு மக்களுக்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் கோரிக்கையை பெறுவதற்காகவாவது ஆளுநர் இருந்திருக்க வேண்டியது தார்மிகக் கடமை என்று சரத் பவார் சாடினார்.