டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தச் செயலிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது அவை நிரந்தரமாகவே தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் எப்படிப்பட்ட தரவுகளை சேகரிக்கின்றன, சேகரிக்கப்பட்ட தரவுகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதுபோன்ற விவரங்களை அரசு கேட்டிருந்தது. நிறுவனங்களால் கொடுக்கப்பட்ட பதில், அரசுக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல், இந்தியாவுக்கு மட்டுமான விளையாட்டை மறு அறிமுகம் செய்ய முயன்றது. பப்ஜி மொபைல் இந்தியா என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்படுவதாக கடந்த நவம்பர் மாதமே அறிவிப்பு வந்தது. அதற்கென ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மறுஅறிமுகத்திற்கான அனுமதி கிடைக்கவில்லை. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ், தடைவிதிக்கப்பட்ட பின்பும் ஊழியர்களை தக்க வைத்திருந்தது. உலகளாவிய மற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது தடை நிரந்தரமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிறுவனங்களின் செயல்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
"அறிவிக்கையை நாங்கள் வாசித்து வருகிறோம். முறைப்படி அதற்குப் பதில் தருவோம். 2020 ஜூன் 29ம் தேதி விதிக்கப்பட்ட இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட முதல் நிறுவனம் டிக்டாக் தான். உள்நாட்டு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை தொடர்ந்து கைக்கொள்ள முடிந்த அளவு முயற்சி செய்வோம். பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.