இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிக்சர் அடித்தால் பாதி மீசையை எடுப்பேன் புஜாராவுக்கு சவால் விடும் அஷ்வின்
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக புஜாரா சிக்சர் அடித்தால் நான் பாதி மீசையை எடுத்துவிட்டு களத்தில் இறங்குவேன் என்று இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியுள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் அஷ்வின் இந்த ருசிகரமான சவால் விடுத்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டவர் ராகுல் திராவிட். அவர் ஓய்வு பெற்ற போது அந்த இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என ரசிகர்கள் கவலைப்பட்டனர்.
ஆனால் அந்த இடத்திற்கு பாறை போல ஒருத்தர் வந்து அமர்ந்துள்ளார். அவர் தான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை கலங்கடித்த சேதேஷ்வர் புஜாரா. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் அனல் கக்கும் பந்துவீச்சை சமாளித்து பாறை போல நின்று இந்திய அணியை இவர் காத்தார். எத்தனையோ பந்துகளை தன்னுடைய உடல் மீது தாங்கிக் கொண்ட இவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். மிக அதிகமான பந்துகளில் அரை சதம் அடித்தவர் என்ற தன்னுடைய உலக சாதனையை இந்த ஆஸ்திரேலிய தொடரில் அவரே முறியடித்தார்.
இந்த டெஸ்ட் தொடரில் இவர் 20 மணி நேரத்திற்கும் மேல் களத்தில் நின்றும் சாதனை படைத்துள்ளார். புஜாரா தேவையில்லாமல் நீண்ட நேரம் களத்தில் இருக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டினாலும், அவரது அந்த ஆட்டமும் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது.இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. அந்த அணி இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக புஜாரா ஒரு சிக்சர் அடித்தால் நான் பாதி மீசையை எடுத்துவிட்டு விளையாட இறங்குவேன் என்று சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் புஜாராவுக்கு ருசிகரமான ஒரு சவாலை விடுத்துள்ளார். அஷ்வின் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பல ருசிகரமான சம்பவங்கள் குறித்து அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோருடன் அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் உரையாடினார்.அப்போது, என்றாவது ஒருநாள் புஜாரா டெஸ்ட் போட்டியில் சிக்சர் அடிப்பதை நம்மால் பார்க்க முடியுமா என்று அஷ்வின் அவரிடம் கேட்டார். அதற்கு அவர் கூறுகையில், அதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன். சிக்சர் அடிக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கான முயற்சியில் அவர் இறங்குவதாகத் தெரியவில்லை என்று ரத்தோர் கூறினார். அப்போது அஷ்வின் கூறுகையில், தற்போது தொடங்க உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மொயின் அலி அல்லது வேறு ஏதாவது சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக புஜாரா இறங்கி வந்து சிக்சர் அடித்தால் நான் என்னுடைய பாதி மீசையை எடுத்துவிட்டு மைதானத்தில் இறங்குவேன். இதை நான் ஒரு சவாலாக அவருக்கு வைத்துள்ளேன் என்று கூறினார். அஷ்வினின் இந்த ருசிகரமான சவால் குறித்துத் தான் இப்போது சமூக இணையதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.