நடிகையின் கணவர் பெயரை பச்சை குத்திய ரசிகை.. மேக்னா ராஜ் இன்ப அதிர்ச்சி..

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்கு மன்றம் அமைத்து அவர்கள் படம் வெளியாகும்போது பட்டாசு வெடித்து, பேனர் கட்டி கொண்டாடுவது ஒரு ரகம், தனக்குப் பிடித்த ஹீரோவின் பெயரை பச்சை குத்திக்கொள்ளும் தீவிர ரசிகர்கள் கூட்டம் இன்னொரு ரகம். தலைவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே கடைபிடிப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் போன்றவர்களுக்கு இதுபோல் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இது போல் தீவிரமான ரசிகைகளை பார்ப்பது அபூர்வம். மறைந்த நடிகர் ஒருவரின் பெயரை பச்சை குத்திக் கொண்ட ஒரு ரசிகை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். குறிப்பாக நடிகரின் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் நடிகை மேக்னா ராஜ். இவர் தமிழில், காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜா கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி சிரஞ்சீவி சார்ஜா தீவிர மாரடைப்பில் பாதிக்கப்பட்டார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மரணம் அடைந்தார். சிரஞ்சீவி மறைந்தபோது அவருக்கு வயது 39. மனைவி மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

முன்னதாக சிரஞ்சீவி மாரடைப்பில் அவதிப்பட்டபோது சுயநினைவில் இருந்த நிலையில் மேக்னா பதற்றம் அடைந்ததைக் கண்டு, டென்ஷன் ஆக வேண்டாம் எனக்கு எதுவும் ஆகாது என்று ஆறுதல் கூறினார். இதுதான் மேக்னாவிடம் சிரஞ்சீவி சார்ஜா கடைசியாகப் பேசிய பேச்சு. குடும்பத்தினர் கூறிய ஆறுதல், சக உறவினர்கள் கொடுத்த தைரியம் மேக்னாவுக்கு ஆறுதல் அளித்தது. கணவர் இறந்த துக்கத்தைத் தாங்கிக்கொண்டு சில மாதங்களில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். மேக்னாவுக்கு உறவினர்கள் மட்டுமல்லாமல் மறைந்த சிரஞ்சீவியின் ரசிகர், ரசிகைகளும் ஆறுதல் கூறினார்கள். சில தினங்களுக்கு முன் மேக்னா தனது இன்ஸ்டாகிராமில் ரசிகை ஒருவர் சிரஞ்சீவி சார்ஜாவின் பெயரை பச்சை குத்திக்கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டார்.

அதில் சி என்ற முதல் எழுத்து பெரிதாகவும் அதற்கு மேல் கிரீடம்போல் அலங்கரித்து என்றும் ராஜா என்பதைக் குறிக்கும் வகையிலும் டிசைன் செய்யப்பட்டிருந்தது. அந்த ரசிகையின் அன்பைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த மேக்னா இதுதான் சிரஞ்சீவி சார்ஜா எனக் குறிப்பிட்டு அந்த ரசிகைக்காக கையெடுத்துக் கும்பிடும் இமேஜி வெளியிட்டிருந்தார். அந்த ரசிகை பெயர் சௌமியா. இவர் வெளியிட்ட மெசேஜில்.சிரு சார்ஜா அண்ணா என் அபிமானி என்று குறிப்பிட்டிருந்தார்.

More News >>