டெல்லி கலவரத்தில் 86 போலீசார் காயம், 22 வழக்குகள் பதிவு போலீஸ் அறிக்கையில் தகவல்

டெல்லி கலவரத்தில் 86 போலீசார் காயமடைந்துள்ளதாகவும், 8 பஸ்கள் உட்பட 17 தனியார் வாகனங்கள் சூறையாடப்பட்டதாகவும் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் குடியரசு தினமான நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் வரலாறு காணாத வன்முறையில் முடிந்தது.

இந்த சம்பவத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லி நகரின் மையப்பகுதியில் பல இடங்களில் போலீசாரும், விவசாயிகளும் நேருக்கு நேர் மோதினர். இதற்கிடையே செங்கோட்டையில் விவசாயிகள் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடியை ஏற்றியது தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். செங்கோட்டை பகுதியில் போலீசாரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி அடித்தனர்.

அப்போது போலீசார் அவர்களிடமிருந்து தப்பிக்க 15 அடி உயரச் சுவரைத் தாண்டி குதித்து ஓடினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த வன்முறைச் சம்பவத்தில் 86 போலீசார் காயமடைந்ததாக டெல்லி போலீசார் உள்துறைக்கு அளித்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு: டிராக்டர் அணிவகுப்பு தொடர்பாகப் பலமுறை விவசாயிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைதியான முறையில் நண்பகல் 12 மணிக்கு டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதனால் அணிவகுப்பு நடத்தும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால் விவசாய சங்கத்தினர் கூறியதற்கு மாறாகக் காலை 8 மணிக்கே அணிவகுப்பு தொடங்கியது. குறிப்பிட்ட வழியில் இருந்து மாறி வேறு வழியில் டிராக்டர்கள் சென்றன. ஒரு சில மணி நேரத்தில் கலவரம் வெடித்தது. எட்டரை மணியளவிலேயே கிட்டதட்ட 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிராக்டர்கள் டெல்லி நகருக்குள் நுழைந்தன. அவர்களிடம் வாள் உள்பட ஆயுதங்கள் இருந்தன. போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலிகளைச் சேதப்படுத்தி போலீசை தாக்கவும் செய்தனர். போலீஸ் தலைமையகம் செயல்படும் ஐடிஓ பகுதியில் போராட்டக்காரர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். டெல்லியில் நுழைவதைத் தடுத்த போது தான் கலவரம் வெடித்தது. போலீசாரை பல இடங்களில் வைத்து போராட்டக்காரர்கள் தாக்கினர்.

செங்கோட்டையின் மேல் ஏறி சீக்கிய கொடியை ஏற்றினர். பல மணி நேர கடும் முயற்சிக்குப் பிறகு தான் போராட்டக்காரர்களை செங்கோட்டையில் இருந்து அப்புறப்படுத்த முடிந்து. மாலையில் தான் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது. இந்த வன்முறையில் 86 போலீசார் காயமடைந்தனர். 8 பஸ்கள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் சூறையாடப்பட்டன. காசிப்பூர், டெல்லி ஐடிஓ, சீமாபுரி, நங்க்ளோய் டி பாயிண்ட், திக்ரி எல்லை மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களில் தான் போலீசார் அதிக அளவில் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக பொது சொத்துக்குச் சேதம் விளைவித்தது, ஆயுதங்கள் பயன்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>