ஆன்லைன் ரம்மி விளையாட்டு விராட் கோஹ்லி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா மற்றும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தற்போது உலகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அதிக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த விளையாட்டால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
ஆனாலும் இந்த விளையாட்டுக்கு ஏராளமானோர் அடிமையாகி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா உள்படப் பலர் பிராண்ட் அம்பாசிடர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி திருச்சூரைச் சேர்ந்த பாலி வர்கீஸ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்து வருகின்றன.
மேலும் இந்த விளையாட்டுக்குப் பல சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்படப் பல பிரபலங்கள் விளம்பரங்களில் தோன்றி மக்களை ஊக்குவித்து வருகின்றனர். இந்த விளம்பரங்களைப் பார்த்து பலரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே இந்த ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதிக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா மற்றும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.