வேறு எண்கள் எதுவும் தேவையில்லை ரயில்வேயில் அனைத்து உதவிகளுக்கும் 139 டயல் செய்தால் போதும்
ரயில்வேயில் பயணிகள் இனி உதவிக்கு பலப்பல எண்களில் தொடர்பு கொள்ள வேண்டாம். 139 என்ற எண்ணில் அழைத்தால் அனைத்து உதவிகளும் பயணிகளுக்குக் கிடைக்கும்.ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு, பாதுகாப்பு, விபத்து, ரயில்கள் வந்து செல்லும் நேரம் உள்படப் பல விவரங்களுக்கு வெவ்வேறு தொலைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. உதாரணத்திற்குப் பாதுகாப்பு தேவைப்படும் பயணிகள் 182 விலும், பொது விவரங்களுக்கு 138 விலும், ரயில் பெட்டிகள் குறித்த புகார்களுக்கு 58888 விலும், உணவுக்கு 1800 111321விலும், லஞ்சப் புகாருக்கு 152210 விலும், விபத்துக்கு 1072 விலும் அழைக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண்கள் இருப்பதால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும், அனைத்துக்கும் ஒரே எண்ணைப் பயன்படுத்தும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பயணிகளின் இந்த கோரிக்கையை ரயில்வே ஏற்றுக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி ரயில் பயணிகள் இனி முதல் அனைத்து உதவிகளுக்கும் 139 என்ற எண்ணை அழுத்தினால் போதும். இந்த ஒரு எண்ணிலேயே பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொலைப்பேசியில் மட்டுமில்லாமல் www.railmadad.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், செல்போன் செயலி மூலமாகவும் பயணிகள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.