விவசாயிகள் சங்கத்தில் திடீர் பிளவு இரண்டு சங்கங்கள் போராட்டத்திலிருந்து வாபஸ்
டெல்லியில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக 2 சங்கத்தினர் அறிவித்துள்ளது போராட்டக் குழுவினருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டையில் புகுந்த போராட்டக்காரர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பல இடங்களில் நேரடி மோதல் ஏற்பட்டது.
இதில் ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பஸ்கள் உட்பட ஏராளமான தனியார் வாகனங்கள் சூறையாடப்பட்டன. செங்கோட்டையில் விவசாயிகளின் கொடி ஏற்றப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செங்கோட்டையில் மட்டும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய கலவரம் தொடர்பாக இதுவரை டெல்லி போலீசார் 23 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மரணமடைந்த விவசாயி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே செங்கோட்டையில் கொடியேற்றிய விவசாயி அடையாளம் காணப்பட்டு விட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பஞ்சாபில் உள்ள தரன் என்ற பகுதியைச் சேர்ந்த ஜுக்ராஜ் சிங் தான் கொடி ஏற்றினார் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.இதற்கிடையே நேற்றைய கலவரத்தைத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு அமைப்பு (ஏஐகேஎஸ்சிசி) மற்றும் பாரதிய கிசான் சங்கம் ஆகியவை போராட்டத்திலிருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன. நேற்று நடந்த போராட்டத்தை கண்டித்தும், பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாயத்துடன் சேர்ந்து செயல்பட முடியாது என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய கிசான் சங்கம் அமைப்பின் தலைவர் வி. எம். சிங் கூறுகையில், முரண்பட்ட கொள்கை உள்ள ஒருவருடன் சேர்ந்து போராட்டம் நடத்த முடியாது. அவர்களுக்கு நல்லது நடக்கட்டும்.
இந்தப் போராட்டத்தில் இருந்து அகில இந்திய கிசான் சங்கம் அமைப்பு வாபஸ் பெறு தீர்மானித்துள்ளது. ராகேஷ் டிகாயத் தலைமை தாங்கும் போராட்டத்துடன் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. விளைபொருட்களுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஆனால் இதுபோன்ற வன்முறைப் போராட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆட்களைக் கொல்வதற்கும், தாக்குவதற்கும் நாங்கள் இங்கு வரவில்லை என்று கூறினார். விவசாயிகள் சங்கத்தினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது இந்தப் போராட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.