`பாபர் மசூதியை விட பெரிது... அயோத்தியில் கட்டப்படும் புதிய மசூதி!

அயோத்தியில் கட்டப்படும் புதிய மசூதி பாபர் மசூதியை விட பெரிதாக உருவாக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி தொடர்பாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் ராமஜென்ம பூமிக்கு சொந்தமானது. இருப்பினும், இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாக புதிய மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு புதிய இடம் வழங்க உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அயோத்தியில் இருந்து சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தான்னிப்பூரில் புதிய மசூசி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து, புதிய மசூதி கட்டுமானப் பணியை மேற்கொள்ள இந்தோ-இஸ்லாமிய கலாசார கழகம் என்ற அறக்கட்டளையை சன்னி வக்பு வாரியம் கடந்த 6 மாதங்களுக்கு முன் அமைத்தது. இந்நிலையில், நேற்று 72-வது குடியரசுத்தினத்தன்று புதிய மசூதி கட்டுமான திட்டப்பணி முறைப்படி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மசூதி அறக்கட்டளை தலைவர் ஜுபார் அகமது பரூக்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். 9 மரக்கன்றுகளை அறக்கட்டளை உறுப்பினர்கள் நட்டனர்.

கட்டப்படும் புதிய மசூதி குறித்து அறக்கட்டளை செயலாளர் அத்தார் ஹுசைன் கூறுகையில், மசூதி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டுவதற்கு குடியரசு தினத்தை எங்கள் அறக்கட்டளை தேர்ந்தெடுத்தது. காரணம், 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் நமது அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அரசியல் சாசனத்தின் அடித்தளமாக அமைந்த பன்முகத்தன்மைதான், புதியமசூதியின் அடிநாதமும் கூட என்றார். மேலும், புதிய மசூதி, பாபர் மசூதியை விட பெரிதாக இருக்கும். ஆனால் அதேபோன்ற தோற்றத்தில் அமைந்திருக்காது என்றார்.

More News >>