அரசியலில் இல்லையென்றாலும் எனக்குத் தலைவர் ரஜினிகாந்த்.. டுவிட்டரில் அர்ஜுனமூர்த்தி உருக்கம்!
எந்தச் சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் கட்சி தொடங்குவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அர்ஜுனமூர்த்தி என்பவரைத் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து, பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வந்த அர்ஜுனமூர்த்தி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஐத்ராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பில் சக ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், நடிகர் ரஜினி மிகவும் அஞ்சமடைந்தார். இதனால், ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, தமிழகம் திரும்பிய நடிகர் ரஜினி, தனது உடல்நிலை காரணமாக கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், அர்ஜுனமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மாற்றத்தின் பயணம் விரைவில் என்று வெளியிட்ட அறிக்கையில், நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை நமது நாட்டுக்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில், நமது தலைவருக்கு உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக, அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் நாமறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் வேதனை அடைந்தேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு ஈடுசெய்யும் வகையில் ரஜினிகாந்தின் நீண்டகால அரசியல் மாற்றத்தின் நினைவானது நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, நமது தமிழகத்தில் `அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்போது... என்று சொன்ன ரஜினிகாந்தின் நல்ல எண்ணம், நல்ல மனது நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள். தற்போது தலைவர் ஒரு நடிகராக, அவரது தொழில் தர்மத்தின் காரணமாக, அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வரக் கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர், புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன்.
எனவே, என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டுக்கு அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி, நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தைத் தருவேன் என்று நம்புகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் எனக்குத் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான்.
அரசியலில் இல்லையென்றாலும், எனக்குத் தலைவர் என்பதையும் தாண்டி, நான் ஒரு ரசிகன் என்பதில் பெருமைகொள்கிறேன். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்டபெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆசீர்வாதம் மட்டும் போதும்...அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். மிக்க நன்றி. விரைவில் மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன் என்று குறிப்பிட்டுள்ளார்.