ஒரு ஆனந்தமான மாலைப் பொழுது இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை சந்தித்த வாஷிங்டன் சுந்தர்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அரங்கேற்றம் நடத்தி அற்புத சாதனை படைத்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானை தனது தந்தையுடன் சென்று சந்தித்தார். 'ஒரு ஆனந்தமான மாலைப் பொழுது' என்ற தலைப்புடன் ரகுமானை சந்தித்த புகைப்படங்களை வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவை அந்நாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் தோற்கடித்த மகிழ்ச்சி இந்திய ரசிகர்கள் மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை.
குறிப்பாக கடந்த 32 வருடங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியா தோல்வியே சந்திக்காத கப்பா மைதானத்தில் இந்திய வெற்றி பெற்றது இன்னும் பல வருடங்களுக்கு அனைவரது மனதை விட்டும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும். இந்த டெஸ்ட் தொடரில் பழைய வீரர்களை விடப் புதுமுக வீரர்கள் தான் அற்புதமாக விளையாடினர். ஆஸ்திரேலிய தொடரில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் செய்னி, முகம்மது சிராஜ் ஆகியோர் அரங்கேற்றம் நடத்தினார்கள். இவர்கள் அனைவருமே மிக அற்புதமாக தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை முடித்த பின்னர் ஊர் திரும்பிய இந்திய வீரர்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த ஊர்களில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைவருக்கும் பாராட்டு விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை அவரது வீட்டுக்குத் தனது தந்தையுடன் சென்று சந்தித்தார். ஏ.ஆர். ரகுமானை அவர் சந்தித்த புகைப்படங்களை வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஒரு ஆனந்தமான மாலைப்பொழுது என்ற தலைப்புடன் இந்த போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.