திருமணம் முடிந்த கையோடுnbspஸ்டெர்லைட் போராட்டத்தில் குதித்த புதுமணத் தம்பதி
ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டம் நடைபெற்று இருந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியும் போராட்டத்தில் கலந்துக் கொண்ட சம்பவம் அனைவரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், அப்பகுதி கிராம மக்கள் மட்டும் இல்லாமல், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள், லாரி ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற பனிமய அன்னைப் பேராலயம் முன்பாக கருப்புக் கொடி ஏற்றி, கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு போராட்டம் நடைபெற்று வந்தது. அப்போது, சின்னக்கோவில் என்றழைக்கப்படும் திரு இருதய பேராலயத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், புதுமணத் தம்பதியினர் திருமணம் முடித்த கையோடு பனிமய அன்னை ஆலய வளாகத்தில் உள்ள போராட்டப் பந்தலில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, “மீசையை முறுக்கு ஸ்டெர்லைட் ஆலையை நொறுக்கு” என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தி கோஷமிட்டனர். புதுமணத் தம்பதியுடன் திருமணத்திற்கு வந்தவர்களும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வால், புதுமணத் தம்பதியினருக்கு இணையத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com