டெல்லி வன்முறை 200 பேர் கைது 550 டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டியதாக 550 டிவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், செங்கோட்டையிலும் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 200 பேர் போலீஸ் பிடியில் உள்ளனர். கலவரத்தைத் தூண்டியதாக 550 டிவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை. நேற்று 2வது நாளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி நிலவரம் குறித்து உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் சங்கத்தினர் இடையே பிளவு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் இருந்து பாரதிய கிசான் சங்கம் மற்றும் ராஷ்ட்ரீய கிசான் மஸ்தூர் சங்கம் ஆகிய அமைப்புகள் திரும்பப்பெறுவதாக அறிவித்தன.

டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதன் பின்னணியில் சதித் திட்டம் உள்ளது என்றும், தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஒருங்கிணைந்த கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று சிங்குவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினமான பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த இருந்த பேரணியை ரத்து செய்வது என்றும், அதற்குப் பதிலாக மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கலவரத்திற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஏஜெண்டுகள் தான் காரணம் என்றும், செங்கோட்டையில் சீக்கிய கொடி ஏற்றியது மற்றும் கலவரத்தில் பஞ்சாபி நடிகர் தீப் சித்து தான் முக்கிய காரணம் என்றும், அவருக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் போராட்டக் குழு தலைவர்கள் தெரிவித்தனர்.

More News >>