ஒன்றும் மாறாது கோஹ்லி தான் கேப்டன் நான் அவருக்கு உதவியாளர் ரகானே கூறுகிறார்
'ஒன்றும் மாறப்போவதில்லை, டெஸ்ட் அணியில் விராட் கோஹ்லி தான் எப்போதும் கேப்டனாக இருப்பார். நான் அவருக்கு உதவியாளராக இருப்பேன்' என்கிறார் ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய அணியின் கேப்டன் அஜிங்கியா ரகானே.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 டெஸ்டுகள் கொண்ட போட்டித் தொடரில் முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மனைவியின் பிரசவத்திற்காக ஊர் திரும்பினார்.
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோல்வி அடைந்திருந்த நிலையில், கேப்டன் கோஹ்லி இல்லாததால் அடுத்த போட்டிகளில் இந்தியாவின் நிலை மேலும் பரிதாபகரமாக இருக்கும் என்று தான் அனைவரும் கருதினர். இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் தோல்வியடையும் என்று பலரும் கூறினர். ஆனால் அதற்கு நேர்மாறாக கேப்டன் ரகானேவின் தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளில் தோற்கடித்து 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடையும் என்ற நிலை இருந்தது.
ஆனால் அந்தப் போட்டி இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தால் டிராவில் முடிவடைந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ரகானேவின் கேப்டன்சி பலராலும் பாராட்டப்பட்டது. இவர் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் நான்கில் வெற்றியும் ஒன்றில் டிராவும் செய்துள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் அடுத்து வரும் போட்டிகளிலும் கோஹ்லியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரகானேவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனால் கோஹ்லியின் கேப்டன் பொறுப்பு பறிபோகுமா என்ற பரபரப்பு நிலவியது. ஆனால் தற்போது ரகானே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: 'ஒன்றும் மாறப்போவதில்லை. டெஸ்ட் அணியின் கேப்டனாக கோஹ்லி தான் எப்போதும் இருப்பார். நான் அவருVirat Kohliக்கு உதவியாக இருப்பேன். கோஹ்லி இல்லாத போது அணியை வழிநடத்திச் செல்ல வேண்டியது என்னுடைய கடமையாகும்.
அதுமட்டுமில்லாமல் இந்திய அணியின் வெற்றிக்காக எனது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டியது எனது பொறுப்பாகும்.கேப்டனாக இருந்தால் மட்டும் போதாது, அந்தப் பதவியை எப்படி நீங்கள் சிறப்பாக பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியமாகும். இதுவரை என்னுடைய கேப்டன் பொறுப்பை நான் சிறப்பாக செய்துள்ளேன் என்ற நம்பிக்கை உள்ளது. வருங்காலத்திலும் அப்படித் தான் நடக்கும் என கருதுகிறேன். என்னால் இந்திய அணிக்கு இனியும் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதற்கு நான் முயற்சிப்பேன். எனக்கும், கோஹ்லிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் மறக்க முடியாத பல இன்னிங்சுகளை நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து விளையாடி உள்ளோம். நான்காவதாக இறங்கும் கோஹ்லியும், ஐந்தாவதாக இறங்கும் நானும் சேர்ந்து சிறப்பாக பல போட்டிகளில் விளையாடி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.