வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா.. பக்தர்கள் குவிந்தனர்..
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் இன்று(ஜன.28) காலை நடைபெற்றது. திருச்செந்தூர் உள்பட முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் காவடி எடுத்து, தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடுவார்கள். அதே போல், இந்த ஆண்டும் இன்று பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்துள்ளனர்.
மேலும், கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் தைப்பூசம் நாளில், வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 நேரங்களில் ஜோதி தரிசனம் காட்டப்படும். இதன்படி, சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி 150வது ஆண்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக, நேற்று சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது.
ஞானசபையில் உள்ள கண்ணாடிக்கு முன்பாக கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கி கண்ணாடிக்குள் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் கண்ணாடியில் பிரகாசமாகக் காட்சி அளித்தது. பக்தர்கள் ஜோதியைத் தரிசித்து, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்று கோஷமிட்டு ஜோதியைத் தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த முறை அன்னதானம் வழங்கவும், அதிக கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து இன்று மதியம் ஒரு மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும்.