நடிகர் தீப் சித்துவை முற்றுகையிட்ட விவசாயிகள் டிராக்டரிலிருந்து இறங்கி தப்பி ஓட்டம் வைரலாகும் பரபரப்பு வீடியோ

டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு காரணமானவர் என்று பரபரப்பாக குற்றம் சாட்டப்படும் பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை விவசாயிகள் முற்றுகையிடுவதும், அவர் டிராக்டரிலிருந்து இறங்கி தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.விவசாயிகள் போராட்டத்தின் போது டெல்லி செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறைக்கு பஞ்சாபி நடிகர் தீப் சித்து தான் காரணம் என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறி வருகின்றனர்.

அவர் தான் விவசாயிகளை வன்முறைக்கு தூண்டினார் என்றும், செங்கோட்டையில் மைக்ரோபோனுடன் வந்து விவசாயிகளை வன்முறையில் ஈடுபட வைத்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சித்துவும், 26 வழக்குகள் உள்ள ரவுடிக் கும்பல் தலைவன் லகா சிதானாவும் டெல்லிக்கு வந்தனர். கலவரத்தை நடிகர் சித்து தான் தூண்டினார் என்றும் விவசாய சங்கத்தினர் கூறுகின்றனர்.

இது குறித்து தீப் சித்து மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.போராடும் தங்களது ஜனநாயக உரிமையை பறிக்க முயற்சித்த போது தான் செங்கோட்டையில் நிஷான் சாஹிப் கொடியை உயர்த்தினோம் என்றும், வன்முறையில் ஈடுபடவில்லை என்றும் பேஸ்புக் நேரலைபில் சித்து கூறினார். இதன்மூலம் அவர் தான் கலவரத்தை தூண்டினார் என்பது தெளிவாகிறது என்று விவசாய சங்கத்தினர் கூறியுள்ளனர். இதற்கிடையே போராட்டம் நடைபெறும் இடத்திற்கு டிராக்டரில் வந்த நடிகர் தீப் சித்துவை விவசாயிகள் முற்றுகையிடும் வீடியோ வெளியாகி உள்ளது. அப்போது அவர் டிராக்டரில் இருந்து இறங்கி ஒரு பைக்கில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகளும் அதில் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே செங்கோட்டை கலவரம் தொடர்பாக தீப் சித்து மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.

More News >>