செங்கோட்டை மீது தாக்குதல்.. 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ்.. பாஸ்போர்ட் பறிமுதல்..
செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் 40 பேருடன் மத்திய அரசு இது வரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, ஜன.26ம் தேதியன்று டெல்லியில் விவசாயிகள் மிகப் பெரிய அளவில் டிராக்டர்கள் பேரணியை நடத்தினர். குடியரசு தினப் பேரணி முடிந்த பின்பு டிராக்டர் பேரணியை நடத்த போலீசார் அனுமதியளித்திருந்த நிலையில், சில இடங்களில் முன்கூட்டியே பேரணியைத் தொடங்கினர்.
அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில் டிராக்டர்கள் சென்றன. டெல்லி போலீசார் பேரணியை தடுத்த போது, விவசாயிகள் டிராக்டர்களால் சாலைத் தடுப்புகளை மோதி உடைத்து கொண்டு சென்றனர். மேலும், செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் ஏறி கடும் வன்முறைகளில் ஈடுபட்டனர். பாஜக, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள்தான் விவசாயிகளுடன் போராட்டத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர் என விவசாயிகள் கூறினர். அவர்கள் திட்டமிட்டு தங்கள் போராட்டத்தை சீர்குலைத்ததாகவும் குற்றம்சாட்டினர். இந்நிலையில், செங்கோட்டையில் புகுந்தது மற்றும் கலவரங்களில் ஈடுபட்டதற்காக சமூக செயற்பாட்டாளர்கள் யோகேந்திர யாதவ், மேதாபட்கர், விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்முறைகளில் 394 போலீசார் காயமடைந்துள்ளதாகவும் போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, செங்கோட்டையில் ஏறியது, கலவரங்களில் ஈடுபட்டது மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது போன்றவற்றுக்காக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்புமாறு டெல்லி போலீசாருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. விவசாயச் சங்கங்களை சேர்ந்த பல்தேவ்சிங், பல்பீர்சிங் ராஜேவால் மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. அவர்கள் காவல் துறை எச்சரிக்கையை மீறியதற்கான காரணங்கள் குறித்து 3 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்கப்படுகிறது. மேலும், அவர்களின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்யவும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகளின் போராட்டங்கள் அமைதி வழியில் தொடர்ந்தாலும் உள்துறை அமைச்சகம் போராட்டத்தை தீவிரமாக ஒடுக்குவதற்கு முடிவு செய்திருப்பது தெரிய வருகிறது.