மாஸ்டர் நாளை ஒடிடி ரிலீஸால் புதிய சிக்கல்.. கூடுதல் பங்கு கேட்கும் தியேட்டர் அதிபர்கள் ..
விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன்தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியிட்ட சில நாட்களில் உலக அளவில் 200 கோடி வசூல் தாண்டியது. கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் 8 மாதகால முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது. இதனால் பல படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.
சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் ஒடிடி தளத்தில் வெளியானதில் தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாஸ்டர் படம் ஒடிடியில் வெளியிட பேச்சு நடப்பதாகத் தகவல் வெளியானதால் அப்படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று தியேட்டர் திறப்புக்காகப் படக் குழு காத்திருந்தது.
கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 50 சதவீத டிக்கெட் அனுமதிதான் என்று கூறப்பட்டதால் மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. 100 சதவீத டிக்கெட் அனுமதி வரும்போது படம் ரிலீஸ் செய்ய எண்ணினர். அரசிடம் நடிகர் விஜய், தியேட்டர் அதிபர்கள் அதற்காக கோரிக்கை வைத்தனர். அரசு அதை ஏற்று 100 சதவீத அனுமதிக்கு அனுமதி வழங்கியது. ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளப்பியது. ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் 100 சதவீத டிக்கெட் அனுமதி ரத்து செய்யப்பட்டு 50 சதவீத அனுமதி மட்டுமே என்று மறு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் அறிவித்தபடி பொங்கலையொட்டி 13ம் தேதி மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியானது. ரசிகர்கள் திரள் திரளாக திரையரங்கத்துக்கு வந்த படம் பார்த்தார்கள்.
ஏற்கனவே சொன்னபடி சில நாட்களில் ரூ. 200 கோடி வசூல் சாதனை செய்தது. இன்னமும் வசூல் குறையாத நிலையில் திடீரென்று நாளை 29ம் தேதி ஒடிடி தளத்தில் மாஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தியேட்டர் அதிபர்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் மாஸ்டர் படத் தயாரிப்பாளரிடம் தற்போது புதிய கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி 'மாஸ்டர்' தயாரிப்பாளர்களிடமிருந்து கூடுதலாக 10 சதவீதம் பங்கைக் தியேட்டர் அதிபர்கள் கோரி உள்ளனர்.பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த தியேட்டர்கள் மாஸ்டர் வெளியீட்டால் புத்துயிர் பெற்றதுடன் மற்ற படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்னுதாரணமாக இருந்தது.
முன்னதாக தியேட்டர் உரிமையாளர்கள் விஜய் மற்றும் 'மாஸ்டர்' குழுவினருக்கு திரையரங்குகளில் படத்தை வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் தற்போது ஒடிடியிலும் மாஸ்டர் வெளியாவதால் தியேட்டர் வசூல் பாதிக்கும் நிலை உருவாகி இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து மாஸ்டர் தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும் சுமூக் முடிவு மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர் அதிபர்கள் அதிருப்தி அடைந்திருந்தாலும் வெளிநாடுகளில் பல இடங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாமலிருப்பதால் அங்குள்ள ரசிகர்கள் மாஸ்டர் படம் ஒடிடியில் வெளியவதை வரவேற்றிருக்கின்றனர்.