பூட்டிய வீட்டை உடைத்து பேராசிரியை நிர்மலா தேவி கைது!

கல்லுரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை காவல் துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து கைது செய்துள்ளனர்.

நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியர்! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இந்தக் கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாக தெரிகிறது. ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது.

நிர்மலா தேவி கருவியாக செயல்பட்டிருக்கிறார். அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும், நிர்மலா தேவியால் வலியுறுத்தப்பட்ட மாணவிகள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். தவிர, நிர்மலா தேவி மீது நடவடிக்கை கோரி மாதர் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி நிர்வாகம் மேற்படி பேராசிரியை நிர்மலா தேவியை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்தது.

இதன் அடுத்தகட்டமாக கல்லூரி நிர்வாகமும், மாதர் அமைப்பும் தனித்தனியாக நிர்மலா தேவி மீது போலீஸில் புகார் செய்தன. அவற்றின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியின் இல்லத்திற்கு சென்றனர்.

இதனையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவியின் அருப்புக்கோட்டை இல்லத்தை சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார். மேலும், வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பேராசியை நிர்மலாதேவி தவறான முடிவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் பூட்டை உடைத்து போலீசார், அவரை கைது செய்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>