சிங்குவில் விவசாயிகளுக்கு திடீர் எதிர்ப்பு தேசியக் கொடியுடன் இளைஞர்கள் ஊர்வலம்

டெல்லி அருகே சிங்கு பகுதியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக இன்று திடீரென போராட்டம் நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தேசியக் கொடியுடன் விவசாயிகளுக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்துக்கு இடையூறு செய்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் உடனடியாக அங்கிருந்து செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் கடும் வன்முறையில் முடிந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அமைப்பினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. சில அமைப்புகள் இந்த போராட்டத்தில் இருந்து வாபஸ் பெற்றுள்ளன. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவோம் என முன்பு விவசாய சங்கத்தினர் கூறியிருந்தனர். ஆனால் இந்தப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் டிராக்டர் அணிவகுப்புக்கு பின்னர் சில நாட்கள் ஊருக்கு சென்றுவிட்டு திரும்ப சில அமைப்பை சேர்ந்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஊருக்கு சென்றால், போராட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக எதிர் தரப்பினர் கூறுவார்கள் என்றும், தேச துரோகிகளாக முத்திரை குத்தி விடுவார்கள் என்றும் நேற்று நடந்த விவசாயிகள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து இந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து போராட்டக் களத்திலேயே இருப்பது என தீர்மானித்துள்ளனர்.இந்நிலையில் சிங்குவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிராக இன்று திடீரென அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தேசியக் கொடியுடன் பேரணி நடத்தினர். டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் தேசியக் கொடியை அவமதித்ததாக கூறியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் அந்த இடத்தை விட்டு உடனடியாக செல்ல வேண்டும் என்று கூறியும் இவர்கள் கோஷமிட்டனர்.

இதனால் சிங்கு பகுதியில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே சிங்குவில் விவசாயிகள் தற்போது 2 கோஷ்டிகளாக பிரிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) மற்றும் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (கேஎம்எஸ்சி) ஆகிய அமைப்புகள் தான் இரண்டாக பிரிந்து சிங்குவில் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்துள்ள போதிலும் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட கலவரத்திற்கு நடிகர் தீப் சித்து தான் காரணம் என்று இந்த இரு அமைப்புகளுமே குற்றம்சாட்டுகின்றன. கேஎம்எஸ்சியும், தீப் சித்துவும் சேர்ந்து தான் கலவரத்திற்கு சதித் திட்டம் தீட்டின என்று எஸ்கேஎம் அமைப்பு கூறுகிறது.

More News >>