ரூ.1 கோடி வரிப்பணம் செலுத்தாததால் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
பாக்கி உள்ள ரூ.1 கோடி சொத்து வரி செலுத்தாததால் நாகர்கோவில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பை துண்டித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய துறை அலுவலகங்கள் சொத்து வரி செலுத்த தேவை இல்லை. இதேபோல், தொலைத்தொடர்பு துறை மத்திய அரசு துறையாக இருந்தவரை சொத்து வரி செலுத்த விலக்கு இருந்தது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனமாக மாற்றப்பட்ட பிறகு நகராட்சிக்கு உரிய சொத்து வரி செலுத்த வேண்டும்.
இந்நிலையில், நாகர்கோவிலில் நகராட்சிக்கு உட்பட்ட பிஎஸ்என்எல் அலுவலகங்களுக்கு ரூ.2 கோடி சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததை அடுத்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடப்பட்டது. இதன் இறுதியில், உரிய வரியை செலுத்துமாறும், இல்லாவிட்டால் நிறுவனத்தின் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பை நகராட்சி துண்டிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1 கோடி வரி பணத்தை செலுத்தியது. ஆனால், மீதமுள்ள ரூ.1 கோடி பாக்கி செலுத்தாத நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பை துண்டிக்க நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நாகர்கோவில் கோர்ட் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீரோடை இணைப்பை துண்டித்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com