காசிப்பூரில் இருந்து விவசாயிகள் வெளியேற உத்தரவு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் ராகேஷ் டிகாயத் சரணடைய முடிவு

காசிப்பூரிலிருந்து 2 நாட்களுக்குள் வெளியேற விவசாயிகளுக்கு காசியாபாத் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதற்கிடையே விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத் விரைவில் போலீசில் சரணடைவார் என கூறப்படுகிறது.டெல்லி எல்லையிலுள்ள காசிப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடந்த வரலாறு காணாத வன்முறையை தொடர்ந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக நேற்று இரவு முதல் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை முதல் அங்கு குடிநீர் சப்ளையும் துண்டிக்கப்பட்டுள்ளது நேற்று இரவு காசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களுக்குள் போராட்டத்தை நிறுத்திவிட்டு இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாமல் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று விவசாயிகள் கூறினர்.

இதற்கிடையே விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் 22 வழக்குகள் பதிவு செய்தனர். விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத், சமூக சேவகர் மேதா பட்கர் உள்பட ஏராளமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராகேஷ் டிகாயத் விரைவில் போலீசில் சரணடைவார் என கூறப்படுகிறது. இதற்கிடையே காசிப்பூரில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உ பி மாநில போலீசாருடன் துணை ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். இன்றிரவே போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News >>