சிறுமியின் கையை பிடிப்பதோ, பேண்டின் ஜிப் பை திறப்பதோ பலாத்கார குற்றம் ஆகாது சர்ச்சை நீதிபதியின் அடுத்த உத்தரவு
5 வயது சிறுமியின் கையை பிடித்ததையோ, பேண்டின் 'ஜிப்' பை திறந்ததையோ பலாத்கார குற்றமாக கருத முடியாது என்று நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா ஒரு சர்ச்சை உத்தரவை பிறப்பித்துள்ளார். இதே நீதிபதி தான் கடந்த சில தினங்களுக்கு முன் உடலும் உடலும் சேர்ந்தால் தான் பலாத்கார குற்றமாக கருத முடியும் என்று கூறி ஒரு சர்ச்சை உத்தரவை பிறப்பித்தார். பின்னர் அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஒரு பெண் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் அவர் கூறியிருந்தது: நான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது என்னுடைய 5 வயது மகளை அப்பகுதியை சேர்ந்த லிப்னுஸ் காஜுர் (50) என்பவர் கையை பிடித்து நிற்பதை நான் பார்த்தேன். இது குறித்து என்னுடைய மகளிடம் விசாரித்த போது, லிப்னுஸ் காஜுர் தன்னுடைய பேண்ட் ஜிப்பை திறந்து தன்னுடன் படுக்க வருமாறு அழைத்ததாக கூறினார். எனவே காஜுர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் லிப்னுஸ் காஜர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் லிப்னுஸ் காஜர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் இபிகோ மற்றும் போக்சோ பிரிவின் படி அவருக்கு 5 வருடம் சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து காஜுர் நாக்பூர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா கனேடிவாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியது: ஒரு சிறுமியின் கையை பிடிப்பதோ, பேண்டின் ஜிப்பை திறப்பதோ போக்சோ சட்டப் பிரிவின் கீழ் பலாத்கார குற்றமாக கருத முடியாது. பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அந்த சிறுமியின் வீட்டுக்கு குற்றம்சாட்டப்பட்டவர் சென்றார் என்பதற்கு அரசுத் தரப்பு தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. தன்னுடைய மகளின் கைகளில் பிடித்ததாகவும், குற்றம்சாட்டப்பட்டவர் பேண்டின் ஜிப்பை திறந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது பலாத்கார குற்றத்தின் வரம்புக்குள் வராது. இந்த வாக்குமூலத்தை வைத்து குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்த முடியாது. வேறு வழக்குகள் எதுவும் இல்லாவிட்டால் அவரை விடுவிக்கலாம் என்று நீதிபதி புஷ்பா கனேடிவாலா தன்னுடைய உத்தரவில் தெரிவித்தார். கடந்த ஜனவரி 15ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தான் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதே நீதிபதி தான் கடந்த சில தினங்களுக்கு முன் வேறு ஒரு சர்ச்சை உத்தரவை பிறப்பித்திருந்தார். நாக்பூரை சேர்ந்த 12 வயது சிறுமியை 39 வயதான நபர் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் சிறுமியின் மேலாடையை கழட்டாமல் தான் உடலைத் தொட்டார் என்றும், உடலும் உடலும் சேர்ந்தால் மட்டுமே பலாத்கார குற்றமாக கருத முடியும் என்றும் நீதிபதி புஷ்பா கனேடிவாலா தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.