ஆஸ்திரேலிய அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இடையே நடப்பது என்ன? அதன் விளைவுகள் எவை?

கூகுள் தேடுபொறி ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவது ஏன்?

தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றின் தேடுதலில் தென்படுகின்ற மற்றும் நிறுவனங்களின் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டுமா என்பது குறித்து நெடுநாள் இருந்த கேள்வி இருந்து வந்தது. தற்போது குறித்த சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அறிமுகம் செய்கிறது. முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின்படி கூகுள், செய்தி நிறுவனங்களோடு வணிகரீதியான ஒப்பந்தங்களை செய்து கொள்ளவோ அல்லது வழக்குகளுக்கு உட்படவோ வேண்டியது வரும். இதுவரை இந்த நடவடிக்கைகளை கூகுள் "செயல்படுத்தப்பட முடியாதவை" என்று கூறி வந்துள்ளது. "இந்த நெறிமுறை வடிவம் சட்டமானால், ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவையை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை" என்று கூகுள் நிறுவனத்தில் மண்டல இயக்குநர் கூறியுள்ளார். அதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், "மிரட்டல்களுக்கு நாங்கள் பதில் அளிக்கமாட்டோம்," என்று கூறியுள்ளார்.

கூகுளுக்கு மாற்று உண்டா?

உலகின் மற்ற பகுதிகளைப் போலவே ஆஸ்திரேலியாவின் தேடுபொறி சந்தையில் 90 முதல் 95 சதவீதம் கூகுளிடமே உள்ளது. ஆனாலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிங்க் (Bing) மற்றும் யாஹூ (Yahoo), தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் டக்டக்கோ (DuckDuckGo) உள்ளிட்ட தேடுபொறிகளும் உள்ளன. இணையதளங்களை ஆய்வு செய்யும் நிறுவனமான அலெக்ஸா, இணைய உலகில் அதிகம் பார்க்கப்படும் தளமாக கூகுளை வகைப்படுத்தியுள்ளது. யாஹூ 11வது இடத்திலும் பிங்க் 33வது இடத்திலும் உள்ளன.

கூகுள் வெளியேறுவது உண்மையில் ஆஸ்திரேலிய மக்களை பாதிக்குமா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளர் ஒருவர் மூன்று மாதங்கள் 'பிங்க்' தேடுபொறியை மட்டுமே பயன்படுத்தியதாகவும் பெரும்பாலும் எல்லா நேரத்திலும் அது நன்றாகவே செயல்பட்டதாகவும் பதிவு செய்துள்ளார். ஆனாலும் கூகுள் தேடுபொறியில் தாம் பயன்படுத்தி பழகிய நுட்பங்களை உபயோகித்து பழைய கட்டுரைகளை தேடியபோது எதிர்பார்த்த பலன் 'பிங்க்'கில் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.மேலும் கூகுள் வெறும் தேடுபொறி மட்டுமல்ல, அதன் தேடும் தொழில்நுட்பம், மின்னஞ்சல் (ஜிமெயில்), கூகுள் மேப் மற்றும் யூடியூப் போன்றவற்றிற்கும் உதவுகிறது. கூகுளின் மிரட்டல் செயல்வடிவம் பெற்றால் அது மற்ற செயலிகளை பாதிக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இவற்றுக்கும் மாற்று உள்ளன. ஆனால் நுகர்வோரால் கூகுள் செயலிகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை மிகக்குறைவான அளவே பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிரச்னை காரணமாக ஃபோவாய் (Huawei) போன்கள் கூகுள் சேவையினை இழந்தபோது, மேற்கத்திய நாடுகளில் போன்களை விற்பனை செய்வது மிகக்கடினமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய பிரச்னை உலகளாவிய அளவில் முன்னுதாரணம் ஆகுமா?

"உலக அளவில் இப்படியே நடைபெறப் போகிறது. எல்லா இடங்களிலும் நீங்கள் வெளியேறப்போகிறீர்களா?" என்று ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ரெக்ஸ் பேட்ரிக் கேள்வி எழுப்பியுள்ளார். ஃபேஸ்புக், கூகுள் போன்ற பாதிக்கப்படும் நிறுவனங்கள் அனைத்துமே அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்தவையாகும். முன்பு இருந்த அமெரிக்க அரசு, இப்புதிய விதியை நடைமுறைப்படுத்த அவசரம் காட்டவேண்டாம் என்றும், இது இயல்புக்கு மாறான ஒன்று என்றும், இதன் எதிர்மறை தாக்கம் நீண்டகாலத்திற்கு இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தது. உள்நாட்டு செய்திகள் தொடர்பான சர்ச்சையில் கூகுள் ஏதாவது ஒரு நாட்டைவிட்டு வெளியேறுவதில் இதேபோல் முன்பு எதுவும் நிகழவில்லை.சீனாவில் ஹேக்கிங் குறித்த பிரச்னையால் 2010ம் ஆண்டிலிருந்து பெரும்பகுதியில் கூகுள் சேவைகள் கிடைக்கவில்லை.

அப்பிரச்னையின்போது சீன பயனர்கள் தேடுதல் முடிவுகளை கூகுள் நிறுத்தி வைத்தது. இதே போன்றே ஆனால் வேறுபட்ட பிரச்னை தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது. காப்புரிமை குறித்த ஐரோப்பிய யூனியனின் சர்ச்சைக்குரிய விதிமுறை தேடுபொறிகளும் செய்தி இணைப்பு தரும் நிறுவனங்களும் அந்த இணைப்புக்கான கட்டணத்தை செய்தி தளங்களுக்கு வழங்கவேண்டும் என்று கூறுகிறது. சமீபத்தில் பிரான்ஸில் கூகுள் அங்கு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பதிப்பாளர்கள், கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முடித்துள்ளனர். ஆனால் குறிப்பிடத்தக்க சில பிரெஞ்சு பத்திரிகைகளே இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதைக் காட்டிலும் விரிவான, கண்டிப்பு நிறைந்த ஆஸ்திரேலிய திட்டங்கள் மிகவும் வேறுபட்டவை.

கூகுளை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியாவின் பண மதிப்பு எவ்வளவு?

சீனாவுடன் ஒப்பிடும்போது, ஆஸ்திரேலியா கூகுளுக்கு மிகவும் சிறிய சந்தையாகும். கடந்த 2019ம் ஆண்டு கூகுள் ஆஸ்திரேலியா நிறுவனம் 4.8 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை ஈட்டியுள்ளது. இவற்றுள் விளம்பர வருவாயே மிகவும் அதிக அளவில் 4.3 ஆஸ்திரேலிய டாலராக உள்ளது. இந்த எல்லா செலவுகளையும் கணக்கில் எடுத்து கூகுள் ஆஸ்திரேலியா நிறுவனம் அந்த ஆண்டில் 134 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை லாபமாக பெற்றுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் வருவாய் இடைவெளிகளை நிரப்புவதற்கு 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலான தொகை கையிருப்பில் உள்ளதாக கணக்கிட்டுள்ளது. ஆனால், இது பணம் மட்டுமே சம்மந்தப்பட்ட விஷயமல்ல.

ஆஸ்திரேலிய மக்கள் அமெரிக்காவுக்கு உரிய கூகுளின் சேவையை மாற்றாக பயன்படுத்திக்கொள்ளலாமா?

ஆஸ்திரேலியாவிலுள்ள கூகுள் பயனர்களை அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது வேறு நாட்டு கூகுள் தேடுபொறிக்கு திரும்பி விட முடியும். சேவை கிடைத்தாலும் உள்நாட்டுக்கான தேடுதல் முடிவுகளை தவற விட நேரிடும். ஆஸ்திரேலிய பயனர்களின் இருப்பிட விவரங்களை ஐபி என்னும் இணைய முகவரியை கொண்டு கண்டுபிடித்து கூகுள் நிறுகூனம் தடை செய்ய முடியும். தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்ற நாடுகளிலுள்ள சேவையை பெறும்படி தங்கள் கணினி வேறு இடத்தில் உள்ளது என்பதை காட்டும்வண்ணம் பயன்படுத்தும் விபிஎன் என்னும் மெய்நிகர் தனி வலையமைப்பை பயன்படுத்துவது எளிய வழியாகும். இந்த வழிமுறையின் வேகம் குறைவு. இதற்கு சந்தாவும் தேவைப்படும். ஆகவே சாதாரண தேடுதல்களுக்கு மக்கள் இதை தவிர்த்துவிடுவர்.

கூகுள் எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்று ஆஸ்திரேலியா விரும்புகிறது?

இதற்கான தொகை தீர்மானிக்கப்படவில்லை. முன்மொழியப்பட்டுள்ள சட்டம், செய்தி நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியவில்லையானால் நீதிபதி ஒருவர் நேர்மையானவிதத்தில் முடிவு செய்யலாம் என்று கூறுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் செய்தி நிறுவனங்களின் விளம்பர வருவாய் முக்கால்பங்காக குறைந்துள்ள நிலையில், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பெரிய தளங்களின் டிஜிட்டல் வருவாய் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில் செய்தி நிறுவனங்களுக்கு நல்ல தொகை செலுத்தப்படவேண்டும் என்று அரசு விரும்புகிறது.

ஆஸ்திரேலிய பதிப்பாளர்கள் பயன்பெறுவார்களா?

ஆஸ்திரேலிய பத்திரிகை துறை துடிப்பு நிறைந்தது. ஏபிசி நியூஸ் என்னும் ஆஸ்திரேலியாவின் பொது செய்தி நிறுவனமும் நியூஸ் கார்ப் என்னும் பெரிய நிறுவனமும் இப்புதிய சட்டத்தால் பயன்பெறக்கூடும். ஏபிசி நிறுவனத்திற்கான நிதி 2014ம் ஆண்டிலிருந்து பெருமளவு குறைந்துவிட்டது. பிராந்திய செய்தி இதழ்கள் பல விளம்பர வருவாய் குறைந்துவிட்ட காரணத்தால் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இணையவழியில் மட்டும் வெளியாகி வருகின்றன. நூற்றுக்கணக்கானோர் வேலை இழந்துள்ள நிலை காணப்படுகிறது.

More News >>