போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் மறுப்பு அதிகாலையில் போலீஸ் வாபஸ் காசிப்பூரில் பதற்றம்
காசிப்பூரில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து வெளியேற விவசாயிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். ஆனாலும் தொடர்ந்து விவசாயிகள் குவிந்து வருவதால் காசிப்பூரில் பதற்றம் நீடிக்கிறது.விவசாயிகள் போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்ததை தொடர்ந்து டெல்லி எல்லையிலுள்ள காசிப்பூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அங்கிருந்து வெளியேற்ற உ பி மாநில அரசு தீர்மானித்தது. இதையடுத்து புதன்கிழமை இரவு காசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் விவசாயிகளை சந்தித்து 2 நாட்களுக்குள் போராட்டத்தை வாபஸ் பெற்று காசிப்பூரில் இருந்து வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தனர். தொடர்ந்து அன்றிரவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று காலை முதல் போராட்டம் நடைபெறும் பகுதியில் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு விவசாயிகளை வெளியேற்றுவதற்காக உ பி மாநில போலீசாரும், துணை ராணுவத்தினரும் காசிப்பூர் பகுதியில் குவிக்கப்பட்டனர். உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று போலீசார் விவசாயிகள் சங்கத்தினரிடம் கூறினர். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டத்தை வாபஸ் பெறும் வரை அங்கிருந்து நகர மாட்டோம் என்று விவசாயிகள் கூறினர். இந்த தகவல் குறித்து அறிந்தவுடன் உ பி மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் அங்கு குவிய தொடங்கினர். இதனால் காசிப்பூரில் பதற்றம் அதிகரித்தது. கண்டிப்பாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று போலீசார் விவசாயிகளுக்கு இறுதிக் கெடு விதித்தனர். இதனால் காசிப்பூரில் பெரும் பதற்றம் நிலவத் தொடங்கியது. ஆனால் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்றும், எனவே எந்தக் காரணம் கொண்டும் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத் கூறினார். இதையடுத்து நேற்று இரவு பல மணி நேரம் அப்பகுதியில் பதற்றம் நீடித்தது.
இறுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறினர். இதற்கிடையே விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தால் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் விவசாயிகள் அனைவரும் ராகேஷ் டிகாயத்தை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தியதால் போலீசாரால் அவரை கைது செய்ய முடியவில்லை. இதற்கிடையே டிராக்டர் அணிவகுப்பின் போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் தான் விவசாயி இருந்ததாக தவறான தகவல்களை சமூக இணையதளங்களில் பரப்பியதாக கூறி காங்கிரஸ் எம்பி சசிதரூர், பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தேச துரோக சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே டெல்லி, ஹரியானா மாநில எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி ஆகிய இடங்களில் இருந்து டெல்லி செல்லும் அனைத்து வழிகளையும் போலீசார் நேற்று இரவு முதல் மூடிவிட்டனர்