கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு
கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் நோயைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் வெளியே செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 25,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா பரவல் அதிகளவில் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தற்போது நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா தான் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை விட குறைந்துள்ள நிலையில் கேரளாவில் மட்டும் சராசரியாக தினமும் 5,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது.
இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. கேரளாவில் நோய் பரவுவதற்கு பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடி தான் காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவில் ஆண்டிஜன் பரிசோதனை தான் அதிகமாக நடத்தப்படுவதாகவும் இதனால் தான் நோய் பரவல் அதிகரிக்கிறது என்றும், எனவே ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் கூறியது. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது: கடந்த சில மாதங்களாக கேரளாவில் கொரோனா அதிகரித்து வருகிறது.
இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் பொது மக்கள் அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளில் 25,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தினசரி கொரோனா பரிசோதனைகளை 1 லட்சமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று கூறினார். இதற்கிடையே கேரளாவில் நோய் அதிகரிப்பதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் தான் காரணம் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.