நாடாளுமன்றம் கூடுகிறது.. உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை..

நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக குறைந்த நாள்களிலேயே கூட்டத் தொடர் முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பங்கேற்கும் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஆண்டின் முதல் கூட்டத்தில் மத்திய அரசின் கொள்கை, திட்டங்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை விவாதமின்றி அவசர, அவசரமாக நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 17 எதிர்க்கட்சிகள் இன்று ஜனாதிபதி உரையை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரின் போது மக்களவையில் 17 உறுப்பினர்களுக்கும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இம்முறை ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் 1200 ஊழியர்களுக்கும் முன்கூட்டியே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கும் தொற்று பாதிக்கவில்லை. அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யவும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

More News >>