பா.இரஞ்சித் தயாரிப்பில் ஹீரோ வாரிசு.. தனுஷ் இயக்குனர் டைரக்ஷன்..
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் 5 படங்கள் சொந்தமாக தயாரிக்கிறார். பல நடிகர்கள் பங்கேற்கும் இதில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படமும் இடம் பெறுகிறது. தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கும் இயக்குனர் டைரக்டு செய்கிறார். பா.ரஞ்சித் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது படங்களை இயக்கி வருகிறார். அட்டகத்தி தொடங்கி, காலாவரை அதையே கருவாகவும் வைத்து வருகிறார். அவர் தயாரிக்கும் படங்களும் அதன் அடிப்படையிலேயே அமைக்கப்படுகிறது. அந்த படங்களுக்கு வரவேற்பும் கிடைத்தது. ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களும் இந்த பாணி படம்தான். அடுத்து பா.இரஞ்சித்தின் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தயாரிக்கும் படத்தை மீண்டும் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவர். இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டு மல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இதில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குனர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குனர்களும் புதிதாக தயாரிக்க உள்ள ஐந்து திரைப்படங்களையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ரைட்டர் என்ற படத்தில் சமுத்திரகனி நடிப்பில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.