கொரோனா பாதித்தால் விந்தணு வீரியம் குறையும்.. ஜெர்மனி பல்கலை. ஆய்வில் தகவல்..
கோவிட்-19 தொற்று பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைந்து விடுவதாக ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்கு பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் 10 கோடி 22 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இது வரை 22 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து அதிகமானோர் மீண்டு வந்தாலும், அவர்களுக்கு உடல்வலி, எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைவதாக ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வு தெரிய வந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஜஸ்டஸ் லைபிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் பெஷாத் ஹாஜிசேடக் மாலேகி, பக்யார்க் டார்டிபான் ஆகியோர் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா பாதித்தவர்களுக்கு நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் பாதிக்கிறது. ஆண்களுக்கு விந்தணுக்களின் ஹார்மோன்கள் பாதிக்கப்படுவதாகவும் முந்தைய ஆய்வுகளில் தெரிய வந்தது.
தற்போது கொரோனா பாதித்து மீண்டு வந்த 84 ஆண்கள் மற்றும் 105 திடகாத்திரமான ஆண்களின் விந்தணுக்களை ஒப்பிட்டு 60 நாட்களுக்கு பரிசீலிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கொரோனா பாதித்தவர்களின் விந்தணுக்களின் வீரியம் குறைவது தெரிய வந்தது. குறிப்பாக, டிஎன்ஏ மற்றும் உடலில் புரோட்டீன் அளவை சிதைக்கிறது. இதனால், குழந்தைப் பேறு பாதிக்கப்படுகிறது. எனினும், சில மாதங்களில் இந்த பாதிப்புகள் குறையத் தொடங்குகிறது. எனவே, கொரோனா பாதிப்பால் விந்தணு உற்பத்தி முழுமையாக பாதிக்கும் என்று கூறி விட முடியாது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.