தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் பதிவு முக்கியம். அரசுக்கு ஆர்.வி.உதயகுமார் கோரிக்கை..
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படமாக உருவாகி இருக்கிறது“சில்லு வண்டுகள். “ சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறு வனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ளார். சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச்சாமி இருவரும் நடித்துள்ளனர். தேவா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ நேற்று வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு தேவா பேசியதாவது:குழந்தைகளுக்காக படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிறது. சில்லு வண்டுகள் கதையை என்னிடம் இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடி சொன்னபோதே அருமையாக இருந்தது. எப்படி சொன்னாரோ அப்படியே படமாக்கி இருக்கிறார். இந்த படத்துக்கு இசை அமைத்த போது நானும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமே இருந்தோம்.
கவிஞர்கள் பாடல் எழுதி கொடுத்து விட்டனர். கம்போசிங்கின் போது அவர்கள் யாரும் வரவில்லை. இந்த மேடையில் தான் அவர்களை நான் பார்க்கிறேன். நல்ல வார்தைகள் பயன்படுத்தி பாடல் எழுதி இருந்தனர். கவிஞர்கள் முக்கியம். பாடல்களுக்கு ஏற்ப இப்படத்தில் நடித்த சிறுவர், சிறுமியர்கள் அற்புதமாக நடனம் ஆடியிருக்கிறார்கள். பின்னணி இசை கோர்ப்பின் போதெல்லாம் அவர்களின் நடிப்பை கண்டு வியப்படைந்தேன். இந்த மேடையில் தயாரிப்பாளர் கே.ராஜன் வந்திருக்கிறார். என் மகன் ஸ்ரீகாந்த் தேவாவை அவர்தான் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். ராசியானவர். ஆர்.வி.உதயகுமார் இங்கு இருக்கிறார். அவரது 2 படங்களுக்கு நான் இசை அமைத்திருக்கிறேன். இளையாராஜா சார் அவரது படங்களுக்கு நிறைய இசை அமைத்திருக்கிறார். எதிர்காலத்தில் உதயகுமாருடன் படங்கள் செய்வேன். சில்லு வண்டுகள் படத்தின் இயக்குனர் சுறுசுறுப்பானவர். அதேபோல் தயாரிப்பாளர் நாராயணன் நல்ல படம் எடுத்திருப்பதுடன் நடித்தும் இருக்கிறார்.
இப்படம் வெளியாகி வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, சில்லு வண்டுகள் பாடல் நன்றாக வந்திருக்கிறது. அதில் நடித்த குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் ஆகும் போது எவ்வளவு பேர் பார்க்கிறார்கள். என்ன கலெக்ஷன் ஆகிறது என்பது தெரிவதில்லை. எனவே அரசு அதற்காக ஆன்லைன் உருவாக்கி டிக்கெட் பதிவு செய்து டிக்கெட்டுகள் வழங்க உத்தரவிட வேண்டும் அதற்கான வேலைகளை அரசு செய்து வருகிறது. விரைந்து அதை நடமுறைப்படுத்தினால் எவ்வளவு பேர் பார்க்கிறார்கள், எவ்வளவு வசூல் ஆகிறது என்பது தெரியும் என்றார். படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே.வெங்கிடி கூறியதாவது: இது முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை கொண்டு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதை விட பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்கையில் அடிமட்டத்திலிருந்து, மேல் மட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் அதற்கு தவறான வழிகளை பின்பற்றக் கூடாது என்பதை இதில் ஆழமாக சொல்கிறோம். அப்படி தனது தம்பிக்காக கெட்ட வழிகளை தேர்ந்தெடுக்கும் ஒரு அண்ணனின் கதை இது.
இந்த படம் குழுந்தைகளுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும்.இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் மனநிலையில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினைகள் இருக்க கூடாது. அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவி செய்யும் எண்ணமும் உள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை இன்றைய குழுந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்தே இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். நடித்த அனைவரும் குழந்தை நட்சத்திரங்கள் என்பதால் அவர்களை வைத்து காட்சிகளை படமாக்க மிகவும் சிரமப்பட்டோம். இந்த படத்தின் கதையை தேனிசை தென்றல் தேவாவிடம் சொன்னபோது குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம் அதனால் நான் இசையைக்கிறேன் என்றார். தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் குழந்தைகளுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இவ்வாறு இயக்குனர் சுரேஷ் கே.வெங்கிடி பேசினார். மேலும் தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் எஸ்.வி. சேகர், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜய் முரளி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.