அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் தடை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முதல் பரிசு வென்ற நபருக்கு நாளை தமிழக முதல்வர் மதுரையில் கார் பரிசு வழங்க உள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு. அதில், " மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில். 33 என்ற எண் கொண்ட பனியன் அணிந்த கண்ணன் என்பவர் முதல் பரிசினைப் பெற்றார்.
ஆனால் அதே பனியனை அணிந்து இருந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் முதல் சுற்றில் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது 33வது நம்பர் பனியனை சட்டவிரோதமாக கண்ணன் என்பவர் அணிந்துகொண்டு ஜல்லிக்கட்டில் கலந்து உள்ளார். அவருக்கு முதல் பரிசான காரினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (30ஆம் தேதி) வழங்க உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து நடைபெற்ற முறைகேடு குறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த ஒரு பயனும் இல்லை.
எனவே ஜனவரி 16 ல் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான முதல் பரிசினை வழங்க இடைக்கால தடை விதித்தும். முறையான விசாரணை நடத்தியும் அதிக மாடுகளை பிடித்த எனக்கு முதல் பரிசை எனக்கு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்து முதல் பரிசு பெற்ற கண்ணனுக்கு பரிசு வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.