வயர்லெஸ் சார்ஜர்: காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்: டிஜிட்டல் உலகில் அடுத்த புரட்சி!
இந்தியாவில் மலிவான விலையில் ஸ்மார்ட் போன் விற்பனை செய்யும் செல்போன் நிறுவனம் என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சியோமிதான். உலகின் முன்னணி நிறுவங்களில் ஒன்றான சியோமி திடீர் திடீரென புதிய வகை செல்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும், பல்வேறு வகையான டிஜிட்டல் சாதனங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், எம்ஐ ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர் மூலம் டிஜிட்டல் டிவைஸ்களை காற்றிலேயே சார்ஜ் செய்யும் வசதியை சியோமி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர் மூலம், வொயர் பயன்படுத்தாமல் ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை சார்ஜ் செய்யலாம் என்று சியோமி நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
முன்னதாக 80 வாட்ஸ் வொயர்லெஸ் சார்ஜிங் வசதியை டெக் டெமோ செய்திருந்தது. அந்த வகையில் இதுவும் இருக்கக்கூடாது என்பது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி வருபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முடிந்தவரை இதை டெமோ என்ற படியிலிருந்து அடுத்த படிக்கு நாங்கள் முன்னேறினாலே அது புரட்சியாக இருக்கும் என சியோமி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எம்ஐ ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர் மூலம், அதிகப்பட்சமாக 6 அடி வரை சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. வெகு நாட்களாவே ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து டிஜிட்டல் சாதனங்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் முயற்சி செய்து வந்தாலும், வணிக ரீதியாக அதை வெற்றிகரமாக எந்தவொரு நிறுவனமும் சந்தையில் அறிமுகம் செய்ததில்லை. இந்நிலையில், வயர்லெஸ் சார்ஜரை வெற்றிகரமாக சியோமி சந்தையில் அறிமுகம் செய்தால் சியோமி மார்க்கெட் எங்கேயோ போய்விடும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.