நடிகர் சோனு சூட்டுக்காக ரசிகர் 2000 கி.மீ சைக்கிள் பயணம்!
நடிகர் சோனு சூட்டுக்காக அவரது ரசிகர் ஒருவர் 2000 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். கொரோன நெருக்கடி காரணமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதியின்றி தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோரை அவரவர் சொந்த ஊர் செல்ல நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில் போக்குவரத்து ஏற்பாடு செய்து உதவி செய்தார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி விவசாயம் செய்ய மாடு இல்லாமல் பிள்ளைகளை வைத்து உழவு செய்த விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து மகிழ்வித்தார்.
மேலும், பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தார். இது போன்ற பல்வேறு உதவிகளை செய்த நடிகர் சோனு சூட்டை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். சினிமாவில் வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்கையில் ஹீரோ என்று பாராட்டப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மகராராஷ்டிரா மாநிலைத்தைச் சேர்ந்த நடிகர் சோனு சூட்டின் ரசிகரான நாராயண் வியாஸ் எனபவர் மக்களுக்கு சோனு செய்த உதவிகளுக்காக 2000 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாராயண் வியாஸ் கூறுகையில், எனது 2000 கி.மீ சைக்கிள் பயணத்தை சோனு சூட்டுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறேன். ஊரடங்கில் நாம் வெளியே வர பயந்து கொண்டிருந்த தருணத்தில் அவர் துணிவுடன் வெளியே வந்து மக்களுக்கு உணவு கொடுத்து, அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல போக்குவரத்து வதசிகளை ஏற்பாடு செய்தார். வாஷிம் நகரில் தொடங்கும் எனது சைக்கிள் பயணத்தில், தெலுங்கானா மாநிலம் ஐதரபாத் வழியாக, பெங்களூரு செல்கிறேன். அங்கிருந்து தமிழ்நாடு மதுரையை அடைந்து இறுதியாக ராம் சேதுவில் முடிவு செய்கிறேன் என்றார்.
இது குறித்து சோனு சூட் கூறுகையில், நாராயணுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் செய்த பணிகளுக்கு அங்கீகாரமாக 2000 கிமீ சைக்கிள் பயணத்தை மேற்கொள்வதாக அவர் அறிவித்த விஷயத்தை கேள்விப்பட்டு நான் நெகிழ்ந்துவிட்டேன் என்று கூறினார்.