போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தப்படலாம் உளவுத்துறை எச்சரிக்கை
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பில் கடும் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்திற்கு பின்னர் விவசாயிகள் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள காசிப்பூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அங்கிருந்து வெளியேற காசியாபாத் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து. ஆனால் விவசாயிகள் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டனர். இதனால் உ பி மாநில போலீசாரும், துணை ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசாரும், துணை ராணுவமும் சேர்ந்து விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்பகுதியில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் அங்கிருந்து செல்ல மறுத்து விட்டனர். இந்நிலையில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த சிலர் 2 முறை போராட்டம் நடத்தினர். உடனடியாக விவசாயிகள் அங்கிருந்து செல்ல வேண்டும் என்று கூறி விவசாயிகள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் பகுதியில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் அங்கு தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிராக மீண்டும் கடுமையான தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கும், காசிப்பூர் பகுதியிலும் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அம்பாலா, கர்னால் உள்பட ஹரியானா மாவட்டத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இன்று மாலை வரை இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சிங்குவில் 44 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அலிப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை வாளால் தாக்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டார். பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று கிசான் சபை தலைவர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மகாத்மா காந்தி மறைந்த நாளான இன்று விவசாயிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகின்றனர்.