கொரோனா வழிகாட்டுதல் முறையின் படி நடந்த கேரள அரசின் சினிமா விருது வழங்கும் விழா
கேரள அரசின் கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடந்தது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி இந்த விழா நடத்தப்பட்டது.
கேரள அரசு சார்பில் சிறந்த சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019ம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த வருடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கடந்த இரு மாதங்களுக்கு முன் கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் பாலன் விருதுகள் பெறுபவர்களின் விவரங்களை அறிவித்தார். இதன்படி சிறந்த நடிகராக ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தில் நடித்த சுவராஜ் வெஞ்சாரமூடும், சிறந்த நடிகையாக பிரியாணி என்ற படத்தில் நடித்த கனி குஸ்ருதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த படமாக வாசந்தி தேர்வு செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு என்ற படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த குணச்சித்திர நடிகராக கும்பளங்கி நைட்ஸ் என்ற படத்தில் நடித்த பகத் பாசிலும், குணசித்திர நடிகையாக வாசந்தி என்ற படத்தில் நடித்த சுவாசிகாவும் தேர்வு செய்யப்பட்டனர். கும்பளங்கி நைட்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் சிறந்த இசை அமைப்பாளராகவும், நஜீம் அர்ஷாத் சிறந்த பாடகராகவும், மதுஸ்ரீ நாராயணன் சிறந்த பாடகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். நடிகருக்கான சிறப்பு ஜூரி விருதுக்கு மூத்தோன் என்ற படத்தில் நடித்த நிவின் பாலி தேர்வு செய்யப்பட்டார். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை இயக்கிய ரதீஷ் பொதுவாள் சிறந்த புதுமுக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.
விருது பெற்ற கலைஞர்கள்
இந்நிலையில் சிறந்த சினிமா கலைகளுக்கான விருதுகள் வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இந்த விழா கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடத்தப்பட்டது. விருது பெற்ற கலைஞர்கள் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களும் மட்டுமே விழாவுக்கு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக கலைஞர்களுக்கான பெரும்பாலான விருதுகளை முதல்வரும், இதன் பின்னர் கலாச்சாரத் துறை அமைச்சரும் தான் வழங்குவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இவர்கள் யாரும் நேரடியாக கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கவில்லை. கலைஞர்களின் பெயர் அறிவிக்கப்படும் போது அதற்குரிய விருது மேடையில் உள்ள மேசையில் வைக்கப்படும். பெயர் அறிவிக்கப்பட்டவுடன் கலைஞர்கள் சென்று விருதுகளை எடுத்துக் கொண்டனர். வழக்கமாக விருதுகள் வழங்கப்பட்ட உடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் இம்முறை கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மிகக்குறுகிய நேரத்தில் விழா நடத்தி முடிக்கப்பட்டது.